வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 11 விவசாயிகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 17 நாட்களாக கடும் குளிரிலும், பணியிலும் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் பாஜக மோடி அரசு, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது எனத் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 11 விவசாயிகள் இறந்துள்ள செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைக்க விவசாயிகள் இன்னும் எத்தனை தியாகங்களைச் செய்ய வேண்டும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தனது பதிவில், “விவசாயச் சகோதரர்கள் கடந்த 17 நாட்களில் 11 பேர் உயிரிழந்த நிலையிலும் மோடி அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
மத்திய அரசு இன்னும் தொடர்ந்து தங்களுக்குப் பணம் வழங்குவோர் பக்கமே நின்று கொண்டிருக்கிறது. உணவு வழங்கும் விவசாயிகள் பக்கம் வரவில்லை. ராஜ தர்மம் உயர்ந்ததா அல்லது பிடிவாதம் உயர்ந்ததா என்பதை தேசம் தெரிந்துகொள்ள விரும்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.