சீனா, இத்தாலியை விட இந்திய வைரஸின் தாக்குதல் அபாயகரமாக இருப்பதாக நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

சீனக் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் மானசரோவர் பகுதிக்கு நுழைவாயிலாக இருக்கும் லிபுலேக் கணவாய்க்கு செல்லும் எல்லையோர சாலை ஒன்றை இந்தியா தொடங்கியது. கடந்த 8-ம்தேதி பாதுகாப்பு அமைச்சர் உத்தரகாண்டில் இருந்து லிபுலேக்கை இணைக்கும் சாலையை திறந்து வைத்தார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் நேபாளமும் தற்போது எதிர்ப்பை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்தியாவுடன், சர்ச்சைக்குரிய நிலங்கள் அடங்கிய, புதிய தேசிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் உத்தராகண்ட் மாநில எல்லைப் பகுதியில் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகிய பகுதிகள் உள்ளன. இவை நேபாளத்திற்கு சொந்தமானது என்று கூறி அந்நாடு புதிய வரை படத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருக்கிறது. மேலும் நேபாள பிரதமர் வெளியிட்டுள்ள கருத்துக்களும், இந்தியாவை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பிரதமர் ஒலி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, முறையான பரிசோதனை ஏதும் மேற்கொள்ளாமல் சட்டவிரோதமாக, இந்தியாவிலிருந்து வருபவர்களால் நேபாளத்தில் கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. இதற்கு உள்ளூரை சேர்ந்த பிரமுகர்கள், சில அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பொறுப்பாவார்கள்.

இந்தியாவின் வழியே பரவும் வைரஸ் சீனா மற்றும் இத்தாலிய கொரோனா வைரஸை விட அபாயகரமானது. இந்திய வைரஸால்தான் நேபாளத்தில், அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியா ஆக்கிரமித்துள்ள நேபாள பகுதிகளை திரும்ப பெறும் வரை நாங்கள் ஓயமாட்டோம். இந்த விஷயத்தில் யார் வருத்தம் அடைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எந்த விலை கொடுத்தாவது அப்பகுதிகளை மீட்போம். இவ்வாறு சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: ராணுவ கேன்டீன்களில் உள்நாட்டு பொருட்கள் மட்டுமே விற்பனை அறிவிப்பு திடீர் வாபஸ்- மத்திய உள்துறை அமைச்சகம்