பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட சிப், செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்டது என்று ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் கூறியதற்கு ஆதாரத்தையும், அறிவியல் ஆய்வுகளையும் கொடுங்கள் என்று 600 அறிவியல் விஞ்ஞானிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
மத்திய அரசின் அமைப்பான ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக், மத்திய மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறையின் கீழ் வருகிறது. இந்த ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கின் நோக்கம், பசுக்களைப் பாதுகாத்து, அதன் வளர்ச்சியை மேம்படுத்துவதாகும்.
ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பின் தலைவர் வல்லபாய் கதிரியா கடந்த 12-ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில், பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட ‘சிப்’ போன்ற அட்டையை வல்லபாய் அறிமுகம் செய்தார்.
‘கவுசத்வா கவாச்சி’ எனப் பெயரிடப்பட்ட பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட அந்த சிப்பை ஒவ்வொருவரும் வைத்திருந்தால் அனைவரையும் பாதுகாக்கும். இது கதிர்வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்டது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்பை மொபைல் போனில் பயன்படுத்தி, கதிர்வீச்சைத் தடுக்க முடியும். மக்கள் நோயிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடியும் என்று வல்லபாய் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தியன் மார்ச் ஃபார் சயின்ஸ் அமைப்பின் அறிவியல் விஞ்ஞானிகள் 600க்கும் மேற்பட்டோர் கொண்ட குழு ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கிற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், “பசுவின் சாணத்தால் உருவாக்கப்பட்ட சிப், மொபைல் போனில் கதிர்வீச்சைத் தடுக்கும் என்று எந்த ஆய்வு கூறியது? அந்த ஆய்வு எங்கு நடத்தப்பட்டது,
ஆய்வு நடத்திய அறிவியல் வல்லுநர்கள் யார், நீங்கள் நடத்திய ஆய்வில் எந்த மாதிரியான தரவுகள் சேகரிக்கப்பட்டன, அறிவியல் பூர்வமான ஆதாரங்களை வெளியிட வேண்டும். அந்த ஆதாரங்கள் எந்த நாளேட்டில் பிரசுரம் ஆகின என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” எனவும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.
மேலும் வாசிக்க: பசு சாணத்தால் செய்யப்பட்ட சிப் கதிர்வீச்சை குறைக்கும்- மத்திய அரசின் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்