செல்போன் கதிர்வீச்சைக் குறைக்கப் பயன்படும் பசுஞ்சாணியில் இருந்து செய்யப்பட்ட சிப் ஒன்றை தேசிய காமதேனு ஆணைய தலைவர் வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் சார்பில் கடந்த 2019 ஆம் வருடம் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் விலங்குகள் நலத்துறை, பால்வளத்துறையின் கீழ் இயங்கும் இந்த ஆணையம் பசுக்களை பாதுகாக்க மற்றும் முன்னேற்ற தொடங்கப்பட்டது. இந்த ஆணையம் பற்றிய அறிவிப்பு 2019-20 நிதி நிலை அறிக்கையில் வெளியானது. இந்த ஆணைய தலைவராக வல்லபாய் கத்திரியா உள்ளார்.

அவர் தேசிய அளவில் காமதேனு தீபாவளி திட்டம் என ஒன்றைத் தொடங்கி உள்ளார். இது பசுஞ்சாணியின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை அறிமுகப்படுத்தும் திட்டமாகும். அவர் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்த போது தனது உரையில், “சில தினங்களுக்கு முன்பு நீங்கள் நடிகர் அக்‌ஷய் குமார் கூறியதைக் கேட்டு இருப்பீர்கள். அவர் பசுஞசாணியை உண்கிறார். நீங்களும் அதை உண்ணலாம் அது ஒரு மருந்து.

தற்போது அதை வைத்து நாம் பல ஆராய்ச்சிகளை செய்யத் தொடங்கி உள்ளோம். இந்த ஆய்வின் மூலம் அதிசயம் என நாம் கருதும் பலவற்றையும் செய்ய முடியும். பசுஞ்சாணி என்பது கதிர்வீச்சுக்கு எதிரானது. இதை உங்கள் வீட்டில் வைத்திருப்பதால் கதிர்வீச்சு அழியும்.

கவுசத்வா கவாச்சி என்னும் ஒரு சிப் ராஜ் கோட்டில் உள்ள ஸ்ரீஜி கோசாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்பை நீங்கள் உங்கள் மொபைல் போனில் வைக்கலாம். இந்த சிப் வைக்கப்பட்டுள்ள மொபைலில் இருந்து வரும் கதிர்வீச்சை இந்த சிப் வெகுவாக குறைத்து விடும். கதிர்வீச்சினால் பரவும் நோய்களை தவிர்க்க இந்த சிப் பயன்படும்.

மேலும், “இந்த சிப்புக்ள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 500க்கும் அதிகமான கோசாலைகள் இந்த சிப்பை தயாரிக்க உள்ளன. இந்த சிப்புகள் ரூ.50- ரூ.100 வரை விலை இருக்கும். இதை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் ஒருவர் அதை அங்கு 10 டாலருக்கு விற்பனை செய்கிறார். எங்கள் நோக்கம் பசுஞ்சாணியில் உள்ள கதிர்வீச்சு எதிர்ப்பு சக்தி குறித்துப் பரப்புவதே ஆகும்.

இதைப் போல் பசுஞ்சாணியில் செய்யப்பட்ட தீபங்கள், பத்திகள், பேப்பர் வெயிட்டுக்ள், கடவுளர்கள் சிலை ஆகியவையும் விலைக்கு உள்ளன. நமது ஆணையம் இந்த தீபாவளி தினத்தன்று 11 கோடி மக்களின் வீடுகளில் பசுஞ்சாணியில் செய்யப்பட்ட தீபங்களை ஏற்றச் செய்ய வேண்டும் என எண்ணுகிறது” எனத் தெரிவித்துள்ளார். இதுபோன்று பாஜகவினர் தொடர்ந்து பசு கோமியம், சாணம் உபயோகிப்பது குறித்து பரப்பி வருவது சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.