ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மற்றும் நிர்வாகிகள் என 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக, இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெறவுள்ளன. செப்டம்பரில் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள இப்போட்டி தொடரில் பங்கேற்பதற்காக, சிஎஸ்கே அணி வீரர்கள் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி துபாய் புறப்பட்டு சென்றனர்.

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவருக்கும் ஏற்கெனவே மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 28) நான்காவது முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், அணியின் வேகபந்து வீச்சாளர் தீபக் சாஹர், மற்றும் அணி நிர்வாகிகள் என மொத்தம் 13 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிஎஸ்கே அணி வீரர்களுக்கான தனிமைப்படுத்தல் முகாம் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக அணி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2020 ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீரென விலகியுள்ளார். இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தனது பதிவில், “சொந்தக் காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்.

இதனால் ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். இந்தச் சமயத்தில் ரெய்னாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் சிஎஸ்கே நிர்வாகம் முழுமையான ஆதரவை வழங்குகிறது” என்று கூறியுள்ளார்.

இன்று முதல் பயிற்சியை தொடங்க இருந்த நிலையில், சுரேஷ் ரெய்னா விலகல் மற்றும் அணி உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஆகியவை சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் வாசிக்க: தோனியை பிசிசிஐ சரியாக நடத்தவில்லை- பாகிஸ்தான் வீரர் சாக்லின் முஸ்தாக்