கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் இனவெறிக்கு எதிராகவும் கனடாவில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முழங்காலிட்டு அஞ்சலி செலுத்தினார்.

அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தில் கடந்த 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின இளைஞர் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு நீதி கோரி அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

வெள்ளை மாளிகை முன்பும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இப்போராட்டத்தின் போது டிரம்பை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் பதுங்குகுழியில் தங்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களை போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும், ரப்பர் தோட்டாக்களை வீசியும் கலைத்து வருகின்றனர். இப்படுகொலையை முன்னாள் அதிபர் ஒபாமா கண்டித்தார். பல ஆண்டுகளாக அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் அடக்குமுறையை சந்தித்து வருவதும் நிகழ்கின்றது.

மேலும் வாசிக்க: போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை களமிறக்க உத்தரவிட்ட டிரம்ப்.. வரமறுத்த ராணுவ தலைமையகம்

அமெரிக்கா தவிர ஐரோப்ப நாடுகளிலும் இந்த போராட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் கனடா தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார்.

அவருடன் இணைந்து சோமாலியாவின் அமைச்சர் அகமது உசேனும் கலந்து கொண்டார். அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு மரியாதை செலுத்தும் வரையில் ஜஸ்டின் ட்ரூடோ முழங்காலிட்டு 9 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கருத்து கூறவோ பேட்டி அளிக்கவோ மறுத்துவிட்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் யாரும் ஒன்று கூட வேண்டாம் என கூறப்பட்ட நிலையில் பிரதமர் ட்ரூடோ பங்கேற்றது போராட்டக்காரர்களுக்கு உறுதுணையாக அமைந்தது என தெரிவித்துள்ளனர்.