இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை கடந்த வெள்ளிக்கிழமை இரவு (அக் 26) நீக்கிய அதிபர் சிறீசேனா, நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபட்சவை நியமித்தார்.

இது, சர்வதேச அளவில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயக பண்புகளை இலங்கை அரசு மதிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவை வலியுறுத்தின.

இந்த நிலையில் இலங்கையில் பரபரப்பான அரசியல் சூழலில், அந்நாட்டு நாடாளுமன்றம் வரும் 7-ஆம் தேதி கூடுவதாகவும், அன்றைய தினம், புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபட்ச மீதான நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெறும் என இலங்கை நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இலங்கையில் பரபரப்பான அரசியல் நெருக்கடிக்கு வரும் 7-ஆம் தேதி கூடு இலங்கை நாடாளுமன்றம் தீர்வு காணும் என நம்பிக்கை தெரிவித்தார். அதேவேளையில் நம்பிக்கை இழந்த சிலர் வன்முறையில் ஈடுபடக் கூடும் என்றும், அதை தவிர்ப்பதற்கு போதிய கால இடைவெளி இல்லை என்று தெரிவித்தார்.

மேலும், வன்முறையில் ஈடுபடக் கூடாது என தமது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிட்ட ரணில், தற்போதைய சூழ்நிலையில் என்ன நடக்கும் என்பதை கூற முடியாது என தெரிவித்துள்ளார். அதிபர் சிறீசேனவுடன் மோதல் வரும் என எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், பதவி நீக்கம் நிகழும் என எதிர்பார்க்கவில்லை என ரணில் கூறியுள்ளார்.