கொரோனாவால் மக்களிடம் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு, பொறியியல் உட்பட உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் 100 சதவிகிதம் அப்படியே திருப்பி அளிக்கப்படும் மற்றும் இலவச ஆன்லைன் GATE பயிற்சி அளிக்கப்படும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘ஜெகனண்ணா வித்யா தீவெனா’ என்னும் திட்டத்தை தொடங்கி வைத்து, பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, “பொறியியல் உட்பட உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் 100 சதவிகிதம் அப்படியே திருப்பி அளிக்கப்படும். இதற்காக ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசு செயல்பட்ட காலத்தில் மிச்சமிருந்த தொகையை வழங்கவும் எங்கள் அரசு சார்பில் ரூ.1,880 கோடியை விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தேவையுள்ள மற்றும் ஏழை மாணவர்களுக்குக் கல்வி சாத்தியம் ஆக வேண்டும். குழந்தைகளுக்குக் கொடுக்க முடிகிற ஆகச் சிறந்த செல்வம் கல்வியே. அதை நோக்கியே நாங்கள் பயணிக்கிறோம். இத்திட்டத்தின் மூலம் ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 12 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்” என்று தெரிவித்தார்.
மேலும் வாசிக்க: ஏழை மாணவர்களின் கல்வி கனவை நசுக்கும் நுழைவுத்தேர்வு பரிந்துரை
அதேபோல், ஆந்திர அரசு, ஆந்திர மாநில உயர் கல்விக்கான கவுன்சில் (APSCHE) உடன் இணைந்து, பொறியியல் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் GATE பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங் / இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் இலவச பயிற்சி வாய்ப்பைப் பெறலாம்.
ஆந்திராவின் 3 மற்றும் 4 ஆம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு மட்டுமே இலவச பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கான பதிவு செயல்முறை இன்று தொடங்கி மே 7, 2020 அன்று முடிவடையும். வகுப்புகள் மே 11, 2020 முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இதேபோல் பல கல்விச் சலுகைகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். அதில் ஒன்று, “ஜெகனண்ணா அம்மா வோடி” என்னும் திட்டத்தின் மூலம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் ஏழைத் தாய்மார்களுக்கு 1 முதல் 12-ம் வகுப்பு வரை ஒவ்வோரு ஆண்டும் ரூ.15 ஆயிரத்தை அரசே வழங்கும் திட்டத்தை ஆந்திர மாநில அரசு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.