கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் தேசிய மற்றும் மாநில அளவில் நுழைவுத்தேர்வு நடத்த பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, கொரோனா முடக்கத்தை கருத்தில் கொண்டு கற்றல் – கற்பித்தல் நடைமுறை, தேர்வுகள், சேர்க்கை, கல்வியாண்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள், பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஹரியாணா மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குஹத், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வர் ராவ் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டது.

நுழைவுத் தேர்வை நடத்துவதில் தாமதம் மற்றும் நிலுவையில் உள்ள இறுதித் (Board Exams) தேர்வுகள் உள்ளிட்டவைகள் அடுத்த கல்வியாண்டை தொடங்குவதில் தடையாக இருக்கிறது. எனவே ஆகஸ்ட் மாதம் மாணவர் சேர்க்க நடத்தி, செப்டம்பர் மாதத்தில் 2020-2021 கல்வியாண்டை தொடங்கலாம் என அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. வருங்காலங்களில் இதுபோன்ற பேரிடர்களை எதிர்கொள்ள ஆன்லைன் முறைக்கு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தயாராக வேண்டும் எனவும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும் படிக்க: கொரோனா பரவல் எதிரொலி: 2020-21 கல்வியாண்டை செப்டம்பரில் துவங்க பரிந்துரை

மேலும் இந்த குழு, University Grants Commission (UGC)-க்கு அளித்துள்ள பரிந்துரையில், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தேசிய மற்றும் மாநில அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. சில கல்லூரிகள் தனித்தனியாக அவர்களுக்கான இடங்களை நிரப்பி கொள்வதற்கான கலந்தாய்வுகளையும், தேர்வுகளையும் நடத்துகின்றன. மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு, பொறியியல் படிப்பில் வேலைவாய்ப்பின்மை போன்றவற்றால் அதன் மீதான மோகம் குறைந்து, தற்போது கலை, அறிவியல் கல்லூரிகளில் பெரும்பாலான மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

குறிப்பாக இக்கல்லூரிகளில் கல்விக்கட்டணம் குறைவு. படித்து முடித்ததும் மாணவர்களுக்கு பல்வேறு துறையில் வேலை வாய்ப்பு உள்ளதால் கலை மற்றும் அறிவியல் படிப்புகள், ஏழை மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் படிப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில், இப்படிப்புகளுக்கும் தேசிய மற்றும் மாநில அளவில் நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.