சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கு எந்தவித அன்பளிப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் இடைவேளையின்போது தேனீர் மட்டுமே வழங்கப்படும் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக்குழு மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இனிமேல் பத்திரிகையாளர் காட்சி உள்பட எந்தவொரு சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கு எந்தவித அன்பளிப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் சினிமா விழாக்களின் இடைவேளையின்போது மட்டுமே தேனீர் வழங்கப்படும் என்றும்,
மேலும் விமர்சனம் என்ற பெயரில் நடிகர், நடிகைகளை தனிநபர் தாக்குதல் செய்யும் நபர்களை எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட மாட்டாது, அதுமட்டுமின்றி அவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம் தயாரிப்பாளர்களின் செலவுகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர்களின் இந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பிரபல இயக்குனர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது, படம் வெளியான நாளே படம் விளம்ரமும் பெற்று தரக்குறையாக ஒருமையில் விமர்சனம் செய்வோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்ற முடிவு நியாயமானது.
ஆனால் நேர்மையான பத்திரிகையாளர்களுக்கு போக்குவரத்துத்செலவு தருவது நியாயமானது, தயவு செய்து மறுபரிசீலனை செய்யவும், நன்றி என்று கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.