அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரை குறிப்பிட்டு, பிரதமர் மோடி மற்றும் அக்ஷய் குமார் உரையாடலை விமர்சித்து நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ள ட்வீட், சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அண்மையில் பிரதமர் மோடியை, பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நேர்காணல் செய்தார். அரசியல் விவகாரங்களை தனித்து மோடியின் ஆளுமை, பிடித்த சாப்பாடு, நண்பர்கள் உள்ளிட்ட தனிப்பட்ட நிகழ்வுகள் குறித்து அந்த நேர்காணலில் பதிவு செய்யப்பட்டது.
இந்தியாவின் பிரதமரான மோடியிடம் ஒரு அரசியல் கேள்வி கூட கேட்காமல், அவருடைய தனிப்பட்ட நிகழ்வுகளை மட்டும் அக்ஷய் குமார் நேர்காணல் செய்தது கடும் விமர்சினத்திற்குள்ளானது. தவிர, மஹாராஷ்டிரா மக்களவைத் தேர்தலில் அக்ஷய் குமார் வாக்களிக்காதது குறித்து விமர்சிக்கப்பட்டது.
தற்போது இதுகுறித்து நடிகர் சித்தார்த் கலாய்க்கும் விதமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை டேக் செய்து ஹே டொனால்ட் ட்ரம்ப் விரைவில் நீங்கள் தேர்தலை சந்திக்க உள்ளீர்கள். தேர்தல் சமயத்தில் உங்களை ஒரு நேர்க்காணல் எடுக்க வேண்டும். என்னிடம் நீங்கள் எப்படி பழம் சாப்பிடுவீர்கள், உங்களுடைய தூக்கம், பழக்கவழக்கம் மற்றும் உங்களுடைய பர்சனாலிட்டி குறித்து பகிர்ந்து கொள்ளும் படியான முக்கியமான கேள்விகள் இருக்கின்றன. என்னிடம் இந்தியா பாஸ்போர்ட்டும் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அக்ஷய் குமார் பேட்டி எடுத்ததை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் நடிகர் சித்தார்த்தின் ட்வீட் அமைந்துள்ளது.
மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த திங்கள் அன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் இந்தி நடிகர், நடிகைகள் வாக்களித்தனர். அப்போது நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி வாக்களிக்க வந்தார். ஆனால் அக்ஷய் குமார் வரவில்லை. இது சர்ச்சை ஆனது.
பிளாங் திரைப்பட திரையிடல் மும்பையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அக்ஷய் குமாரிடம் பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதில் அளிக்காமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றார். கடந்த சில ஆண்டுகளாகவே அக்ஷய் குமார், டாய்லெட், எக் ப்ரேம் கதா, பேட் மேன் உள்ளிட்ட சமூக கருத்துகளை தாங்கிய படங்களில் நடித்து வருகிறார். வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த தேர்தலில் வாக்களிக்காதது மற்றும் கனடா குடியுரிமை குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பதிவில், “என் குடியுரிமை குறித்து தேவையில்லாத ஆர்வமும், எதிர்கருத்துகளும் ஏன் பரப்பப்படுகின்றன என்று எனக்கு புரியவில்லை. நான் கனடா குடியுரிமை வைத்திருப்பது குறித்து ஒருபோதும் மறைத்ததில்லை. யாரிடமும் மறுத்ததும் இல்லை. இது எந்த அளவுக்கு உண்மையோ, நான் கடந்த 7 ஆண்டுகளாக கனடாவுக்குச் செல்லவில்லை என்பதும் அதே அளவுக்கு உண்மைதான். நான் இந்தியாவில் வேலை செய்கிறேன். அனைத்து வரிகளையும் இந்தியாவிலேயே செலுத்துகிறேன்.
இத்தனை ஆண்டுகளில் நான் தேசத்தின் மீதான காதலை யாரிடமும் நிரூபிக்கவேண்டிய தேவை இருந்ததில்லை. என் குடியுரிமை குறித்து தொடர்ந்து தேவையில்லாத சர்ச்சைகளை நான் விரும்பவில்லை. தனிப்பட்ட, சட்டபூர்வமான, அரசியலற்ற என் குடியுரிமை யாருக்கும் எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை.
கடைசியாக, இந்தியாவை வலிமையாக்க சிறிய அளவிலான எனது பங்களிப்பைத் தொடர்ந்து செலுத்துவேன்” என்று பதிவிட்டுள்ளார்.