யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் லட்சக்கணக்கில் இருப்பதாக கோலிவுட்டில் கூறப்பட்டு வரும் நிலையில் தன்னுடைய சம்பளம் எவ்வளவு என்பதை இன்று நடைபெற்ற ‘தர்மபிரபு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது:

தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை புரிந்தவன் நான். ஞானவேல்ராஜ் கூறியதுபோல் நான் எந்த தயாரிப்பாளரிடமும் 10 லட்சம் சம்பளம் கேட்டதில்லை. ஏனெனில் நான் இரண்டாயிரம், மூவாயிரம் சம்பளம் வாங்கியவன் என்பது பலருக்கு தெரியும். பல தயாரிப்பாளர்களிடம் இருந்து பணம் வருவதில்லை என்பதுதான் உண்மை.

பல புதிய இயக்குனர்கள், தயாரிப்பாளருக்கு நான் குறைவான சம்பளத்தில் நடித்து கொடுத்து உதவி செய்துள்ளேன். நேற்று கூட ஒரு இளம் இயக்குனர் தனது குடும்ப கஷ்டத்தை கூறிய நிலையில் அவருக்காக நான் பாதி சம்பளத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

எனவே என்னை பிடிக்காதவர்கள் எனது சம்பளம் குறித்து சொல்வதை யாரும் நம்ப வேண்டாம். என்னுடைய சம்பளம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நேராக என்னிடம் வந்து கேளுங்கள். மற்றவர்களிடம் கேட்க வேண்டாம் என்றார். மேலும் ஞானவேல்ராஜ்ஜை குறிப்பிட்டு, உங்க கம்பெனிக்கே நான் ரெண்டு படம் பண்ணியிருக்கேன். அதில் எவ்வளவு சம்பளம் கொடுத்தீர்கள் என்பது உங்களுக்கே தெரியும் என்று கூறினார்.

மேலும் நானும், முத்துக்குமரனும் 15 வருட நண்பர்கள். அவர் கூறியது உண்மைதான். நான் லொள்ளு சபாவில் இருந்து கொண்டு வரும் வருமானத்தில் தான் சாப்பிட்டோம். சில நாட்கள் சாப்பிடாமல் கூட மொட்டை மாடியில் படுத்து உறங்கியிருக்கிறோம். அப்போது பேசிய கதை இப்போது படமாக வந்திருக்கிறது. யோகிபாபுவின் இந்த வெளிப்படையான பேச்சு அனைவரையும் கவர்ந்தது.

தர்மபிரபு படம் குறித்து பேசும்போது, இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள். எமலோகத்தில் நான், பூலோகத்தில் சாம். முதலில் மேக்அப் போட்டதும் யாருக்கும் திருப்தி ஏற்படவில்லை. ரேகா தான் கூறினார். இந்த கெட்அப் போட்டாலே திமிர் தானாக வந்துவிடும். அதேபோல் தான் நானும் உணர்ந்தேன். சில இடங்களில் நான் பேசும் வசனங்களைப் பார்த்து படப்பிடிப்பு தளத்தில் பயந்திருக்கிறார்கள். ஆண்டவன் கட்டளை, பரியேறும் பெருமாள் வரிசையில் இப்படமும் பேசப்படும் என்றார்.