பிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபிநய வெங்கடேஷ கார்த்திக் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

1960, 70களில் திரை உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் வாணிஸ்ரீ. இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழில் உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை, கண்ணன் என் காதலன், ஊருக்கு உழைப்பவன், புண்ணிய பூமி, நல்லதொரு குடும்பம் என பல படங்களில் நடித்து உள்ளார்.

வாணிஸ்ரீ டாக்டர் கருணாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். அவருக்கு அபிநய வெங்கடேஷ கார்த்திக்(36) என்கிற மகனும், அனுபமா என்கிற மகளும் உள்ளனர்.

கார்த்திக் திருமணமாகி 4 வயதில் ஒரு மகனும், 8 மாசத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர், பெங்களூரில் ஒரு அரசு கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியை. இவர் மனைவி, குழந்தைகளுடன் நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார்.

மேலும் வாசிக்க: விகடன் குழுமத்தின் 176 பேர் பணிநீக்கம் எதிரொலி- விருதை திருப்பி அனுப்பிய இயக்குனர் லெனின் பாரதி

ஊரடங்கு காரணமாக அவர் கடந்த 2 மாதங்களாக சென்னைக்கு வர முடியாமல் பெங்களூருவிலேயே இருந்தார். இவரது தந்தை கருணாகரன் பெங்களூரு சென்று கார்த்தியை அழைத்து வந்துள்ளார். இருவரும் கடந்த 6-ம் தேதி ஆனூரில் பங்களா வீட்டுக்கு வந்து தங்கியுள்ளனர். வந்ததில் இருந்து வெங்கடேஷ் கார்த்தி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக்கின் உடல் சென்னையில் இருக்கும் வாணிஸ்ரீயின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.

மேலும் கார்த்திக் மாரடைப்பால் இறந்தார் என்றும், சொத்துக்களை பிரிப்பதில் அபிநய வெங்கடேஷ கார்த்திக் மற்றும் அவரது சகோதரியான டாக்டர் அனுபமா ஆகியோர் இடையே சில காலமாகவே பிரச்சனையாக இருந்ததால், சொத்து தகராறால் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

சொத்து விஷயத்தில் அப்பா கருணாகரனும், மகன் அபிநய வெங்கடேஷ கார்த்திக்கும் ஒரு பக்கம் என்றும், அம்மா வாணிஸ்ரீயும், மகள் அனுபமாவும் ஒரு பக்கம் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான முழுமையான காரணம் தெரியவில்லை. இது தற்கொலை என ஒரு படம் இணையத்தில் பரவி வரும்நிலையில்,  இது தொடர்பாக காவல்துறை தரப்பிலிருந்து எதுவும் உறுதிசெய்யப்படவில்லை. எனினும், தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.