திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது குறித்து நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா விளக்கம் அளித்துள்ளார்.
சத்யராஜின் மகள் திவ்யா, இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிஷனிஸ்ட்களில் ஒருவர். சென்னை மாநாகராட்சியுடன் இணைந்து அட்சய பாத்திரம் என்ற அறக்கட்டளை மூலம், அரசு பள்ளி மாண்வர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திவ்யா சத்யாராஜ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து, திவ்யா சத்யராஜ் திமுக.வில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள திவ்யா சத்யராஜ், “கலைஞரின் இயக்கத்தில் அப்பா நடித்த போதிலிருந்தே இரு குடும்பமும் நட்புடன் பழகி வருகிறோம். மு.க.ஸ்டாலின் அவர்களுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமான ஒன்று தான்.
தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையையும், அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்தும் என்னிடம் நிறைய திட்டங்கள் உள்ளன. அது குறித்து அவரிடம் ஆலோசித்தேன். ஸ்டாலின் என்னை நிறைய ஊக்கப்படுத்தினார். அவர் மீதும் அவரது அரசியல் பயணத்தின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.
அரசியலில் எனக்கு ஆர்வம் இருக்கு ஆனால் இந்த சந்திப்பில் அரசியல் குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. தமிழ்நாட்டில் குறைந்த வருவாய் பிரிவில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு, இரும்பு சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. இதனால் ரத்த சோவை நோய் ஏற்படுகிறது. எனவே இதனை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தான் ஸ்டாலின் அவர்களுடன் நிறைய பேசினேன்” என திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
சில வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள், உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஊட்டச்சத்து மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும்படி தனக்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்த திவ்யா, இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத ஊட்டச்சத்து மருந்துகளை தடை செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.