பெண்கள்,குழந்தைகளுக்கு எதிராக சைபர் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்து கேரள அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளார்.

கேரள போலீஸ் சட்டத்தில் பிரிவு 118ல் 118ஏ என்ற ஓர் பிரிவு கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு தனநபரின் மரியாதையை, மாண்பைக் குலைக்கும் உள்நோக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைப் பரப்புதல், படங்களை பதிவேற்றம் செய்தல், ஷேர் செய்தல், அல்லது பிரசுரித்தல் ஆகியவற்றிற்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதம், 5 ஆண்டு சிறை விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் என சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த அவசரச் சட்டம் ஆதாரங்கள் அடிப்படையில், சமூக வலைத்தளத்தில் தனிநபர்களின் மரியாதையை, மாண்பைக் குலைக்கும் வகையில் பதிவிட்ட கருத்துக்கள், அவர்கள் அடைந்த பாதிப்புகளை அடிப்படையாக வைத்தே இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த சட்டம் போலீஸாருக்கு அதிகமான அதிகாரம் அளிக்கும், கருத்துச் சுதந்திரத்தை முடக்கும், பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி கூறுகையில், “தனிநபர்களின் மரியாதையைக் குலைக்கும் வகையில் போலியாக செய்திகளை சித்தரித்து வெளியிடுதல், வெறுப்புப்பேச்சு, பொய்யான செய்திகளை பரப்புதல் போன்றவற்றால் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தன.

சைபர் தாக்குதல்களை தடுப்பது பெரும் சிரமமாக நாளுக்கு நாள் கேரள போலீஸாருக்கு மாறி வந்தது. இதையடுத்து, தனிநபர்கள், பெண்கள், குழந்தைகள் மீதான சைபர் தாக்குதல்களை தடுக்கும் வகையில் போலீஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமித்ஷாவின் தமிழகம் வருகைக்கு எதிராக டாப் டிரெண்டிங்கில் #GoBackAmitShah