அதிமுக அரசின் ஐந்தாண்டு ஆட்சி காலத்தில், தமிழ்நாடு அரசின் கடன் ரூ.5 லட்சம் கோடியாக உயர்ந்து, ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2,63,976 கடன்சுமை உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கொரோனா ஒழிப்பு பணியில் தீவிரம் காட்டியது. இந்தநிலையில், அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக நிதி மேலாண்மை மிகவும் மோசமாக இருந்ததாகவும், இதனால் புதிய அரசுக்கு நிதி நெருக்கடி நீடிப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார்.

மேலும், கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் முதல் இ-பட்ஜெட் மற்றும் திமுக அரசின் முதல் பட்ஜெட் வருகின்ற 14 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 9 காலை 11:30 மணி அளவில் 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை தலைமைச் செயலகத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

வெள்ளை அறிக்கையை வெளியிட்டு பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அரசு இந்த வெள்ளை அறிக்கையை முக்கியமாக 4 காரணங்களுக்காக வெளியிடுகிறோம். எதிர்கட்சியாக இருந்தபோது கேட்டதை ஆளும் கட்சியாக வந்த பிறகு ஒளிவு மறைவின்றி வெளியிடுகிறோம்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றதை நாங்கள் நிறைவேற்றுகிறோம். வெளிப்படை தன்மையுடைய அரசாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை வெளியிடுகிறோம். நமது கடன்நிலை, வருவாய், செலவீனம், முக்கிய பொது நிறுவனங்கள் என்ன சூழ்நிலையில் இருக்கிறது என்பதை மக்களிடம் தெரிவிக்கிறோம்.

இதன்மூலம் நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை, தனிநபர் வருமானம் எப்படி மாறி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். எந்த ஒரு மாநிலத்துக்கும் அடிப்படை வருவாய் மட்டுமே. வருமானம் இல்லாத அரசு, செலவீனத்தை குறைக்க முடியாது.

https://www.facebook.com/savenra/posts/6817521718273693

அந்தவகையில், தமிழ்நாட்டின் வருவாய் மிகவும் சரிந்துவிட்டது. 2006-11 ஆம் ஆண்டு வருமான கணக்கு உபரியாக இருந்தது. ஆனால், கடைசி 5 வருடம் பொதுக்கடன் எடுத்தது ரூ.3 லட்சம் கோடி. இதில், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி அதாவது 50% வெறும் வருவாய் பற்றாக்குறைக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.

கடனை வாங்கி ஊதியம், ஓய்வூதியம் போன்றவற்றிற்கு கட்டாய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு சென்றுவிட்டோம். இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் கடைசி 5 வருடத்தில் இந்த அளவிற்கு சரியவில்லை. கொரோனாவிற்கு முன்பாகவே இந்த சரிவு ஆரம்பித்துவிட்டது. வருவாய் பற்றாக்குறை இருக்கும்போது கண்டிப்பாக நிதி பற்றாக்குறை அதிகரிக்கும்.

பொது சந்தாவில் எடுக்கப்பட்ட கடனை தாண்டி, எத்தனையோ வகைகளில் அரசு கடன் பெறும். பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் காட்டப்பட்டுள்ளது. 2003க்கு பிறகு கடன் சுமையை குறைவாக வைத்திருந்த நாம் இப்போது கடன் சுமையை அதிகரித்து வைத்திருக்கிறோம்.

இன்றைக்கு உள்ள சூழலில் 2,16,24,238 குடும்பங்கள் தமிழகத்தில் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் தலையில் பொது சந்தா கடன் மட்டும் ரூ.2,63,976 இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் பொது சந்தா கடன் தவிர மறைமுகமாக ரூ.39,071 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது.

உதய் திட்டத்தை பலரும் எதிர்த்தார்கள், திமுகவும் எதிர்த்தது. ஆனால், கடந்த அதிமுக அரசு இந்த திட்டத்திற்கு கையெழுத்து போட்டதால் கொரோனா வந்த பிறகு மின்வாரியத்தில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2018-19க்கு பிறகு போக்குவரத்துக் கழகத்திற்கு சந்தாவில் கடனே கிடையாது என்ற நிலை வந்துவிட்டது.

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசலில் வரியை ஏற்றிக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி 33% குறைவிட்டது. ஒன்றிய அரசு நேர்முக வரியை குறைத்து மறைமுக வரியை அதிகரித்ததன் மூலம் பெரும் முதலாளிகள் பயன் அடைகிறார்கள். ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள். இது சமுதாயத்திற்கு எதிரானது.

தமிழ்நாட்டிற்கு தற்போது வரி பங்கு 1.28 சதவீதம் மட்டுமே ஒன்றிய அரசிடம் இருந்து வருகிறது. இன்றைய சூழலில் வரி மொத்தமும் குறைந்துவிட்டது. மாநிலங்களுக்கு செஸ் வரியை முறையாக பகிர்ந்து கொடுப்பதில்லை. ஒன்றிய அரசு பெட்ரோலில் ஒரு லிட்டருக்கு 1.40 பைசா தான் மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள்.

கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கு செலவு செய்வது குறைவிட்டது. மாநகாரட்சி, நகராட்சி, உள்ளாட்சிகள் மின்வாரியத்திற்கு ரூ.1,200 கோடி கட்டாமல் பாக்கி வைத்துள்ளது. 69 பொதுத்துறை நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயக்கப்படுகிறது.

போக்குவரத்துக்கழகம், மின்வாரியம் மட்டும் ரூ.2 லட்சம் கோடி கடன் வைத்துள்ளார்கள். ஒரு நாளைக்கு மின்வாரியத்தில் ரூ.55 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. தமிழ்நாடு அரசு ரூ.3 லட்சம் கோடி ஒரு வருடத்திற்கு செலவு செய்கிறது. மேலும், 2.05 லட்சம் ஹெக்டர் அரசின் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, உட்கட்டமைப்பை சரிசெய்ய வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய ரூ.2,500 கோடிக்கு மேல் மாநியம் வரவில்லை. ஒன்றிய அரசிடம் இருந்து நாம் கடன் பெறாமல் இருக்க முடியாது. மின்சாரவாரியத்தில் சீர்திருத்தத்தை கொண்டுவரவில்லை என்றால் சந்தாவிற்கு கூட கடன் பெற முடியாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இது கடைசி வெள்ளை அறிக்கை இல்லை. முதல் வெள்ளை அறிக்கை தான். இது ஒரு முன்னோட்டம் தான். கடந்த 7 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவை 5 ஆண்டுகளில் சரிசெய்துவிடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சம் கோடி மாயம்: கடந்த ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய் சரியாக செலவிடப்படாமல் முறைகேடாக சென்றடைந்துள்ளது. கிட்டதட்ட ரூ.1 லட்சம் கோடி சட்டமன்றம் ஒப்புதல் கொடுக்காமல், முறைகேடு காரணமாக தவறாக சென்றடைந்துள்ளது. தவறுகளை திருத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஜிஎஸ்டியால் நிதி ஆதாரம் பாதிப்பு: ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டதால் மாநில வரி விதிப்பில் கூடுதல் நிதி ஆதாரத்தை திரட்டுவதற்கான வழிவகைகள் கட்டுப்படுத்தப்பட்டது. எனவே சொத்துவரி வசூலிப்பை அதிகரிப்பது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சுயாட்சியை அதிகரிப்பதுடன், நிதி பகிர்வு மற்றும் பல்வேறு திட்டங்களுக்காக, மாநில அரசு ஏற்கும் நிதிச்சுமை குறையும். பொதுச்சேவையை திறம்பட வழங்குவதற்கும் கூடுதல் நிதி ஆதாரங்கள் கிடைக்கும்.

கொரோனாவிலும் கோட்டைவிட்ட தமிழகம்: கொரோனாவிற்கு முன்பாகவே வருமானம் சரிய ஆரம்பித்துவிட்டது. வருவாய் பற்றாக்குறை இருக்கும் போது கண்டிப்பாக நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். கொரோனா சூழலில் கூட மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நிதி நிலை இந்த அளவிற்கு பள்ளத்தில் செல்லவில்லை. நாம் ஏற்கனவே சரிவில் இருந்ததால் பள்ளத்தில் தள்ளப்பட்டு இருக்கிறோம்.

பொது சந்தாவில் எடுக்கப்பட்ட கடனை தாண்டி எத்தனையோ வகைகளில் அரசு கடன் பெறும். பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் காட்டப்பட்டுள்ளது. 2003க்கு பிறகு கடன் சுமையை குறைவாக வைத்திருந்த நாம் இப்போது கடன் சுமையை அதிகரித்து வைத்திருக்கிறோம்.

போக்குவரத்து கழகத்தில் 1966.85 கோடி எங்கே?: மாநில போக்குவரத்து கழகங்களில் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள், ஓய்வூதியம், டீசல் மற்றும் வட்டி செலிவனங்கள் போன்ற காரணங்களினாலேயே கடந்த 10 ஆண்டுகளில், தொடர்ந்து இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் மாநிலத்தின் அனைத்து போக்குவரத்து நிறுவனங்களும் பேருந்து சேவைகளை முழுவதுமாக வழங்க இயலாததன் காரணமாக, 2020-21 ஆம் ஆண்டில் டீசலுக்கு செலவிடப்பட்ட ரூ.1966.85 கோடிக்கான உண்மையான நிலவரத்தை காட்டவில்லை.

குடிநீர் வாரியங்களில் 5,282.57 கோடி இழப்பு: குடிநீர் வழங்குதலுக்கான இரண்டு சட்டப்படியான வாரியங்கள் அதாவது, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் ஒட்டுமொத்த இழப்பு 31.2.2021 நிலவரப்படி 2,581.77 கோடி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இழப்பு 2700.80 கோடி என மொத்தம் 5,282.57 கோடியாக மொத்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வாரியங்களின் ஆபத்தான நிதிநிலைக்கு அவற்றின் இணக்க செலவினங்களை குறைவாக வசூலிப்பதே முக்கிய காரணமாகும். அதிகள அளவில் கடன் பெறுதல், கூடிக்கொண்டே செல்லும் வட்டி மற்றும் கடன் திரும்ப செலுத்தும் சுமை, கூடுதல் நட்டம் எனும் வெளிவர இயலாத சூழலில் அவை சிக்கிக் கொள்கின்றன.

1 ரூபாய் கடன் வாங்கினால் அதை முழுமையாக முதலீட்டிற்கு செலவு செய்ய வேண்டும். அது தான் பொறுப்புள்ள நிதி மேலாண்மை. அது தான் சட்டம். ஆனால், தன்னுடைய ஆட்சி காலத்தில் 1 ரூபாய் கடன் வாங்கியதில் 50 பைசா முதலீட்டிற்கு செலவு செய்ததாக எடப்பாடி பழனிசாமி கூறுவது அவர் செய்த தவறை அவரே ஒப்புக்கொள்கிறார் என்று தானே அர்த்தம்.

நான் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கடந்த 7 வருட சரிவை எடுத்து பார்த்தால் எனக்கே தன்னம்பிக்கை குறைந்து அச்சம் ஏற்பட்டது. ஆனால், முதலமைச்சர் எங்களுக்கு வழிகாட்டியாக இருப்பதால் இதை தாண்டி எங்களால் வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. மக்களுடைய ஆதரவும், நம்பிக்கையும், ஒத்துழைப்பும் இருந்தால் இதை திருத்த முடியும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை; முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு ஜாமீன்!