பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களவையில் விவாதமின்றி 3 மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி பதில் அளிக்கும் வரை அவைகளை நடத்த விடமாட்டோம் என உறுதியாக உள்ளனர்.

அதேவேளையில் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறது. இதனால் இரண்டு வாரத்திற்கு மேலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன.

இருப்பினும் எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே ஒன்றிய மோடி அரசு இன்று (ஆகஸ்ட் 9) வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மை திருத்த மசோதா 2021, வைப்புக்காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழக திருத்த மசோதா 2021, பழங்குடியினருக்கான அரசியலமைப்பு ஆணை திருத்த மசோதா 2021 ஆகிய மூன்று மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.

மசோதாவை அறிமுகம் செய்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “இது மிகவும் முக்கியமான மசோதா. தொழில், வர்த்தகம் செய்வதை சிறு மற்றும் பெரிய வர்த்தகர்களிடையே மிகவும் எளிதாக்கும். இந்தச் சட்டத்தில் உள்ள கிரிமினல் சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

ஆனால், நிர்மலா சீதாராமனைப் பேசவிடாமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெகாசஸ் திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என கோஷமிட்டனர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலுக்கிடையே அடுத்த மசோதாவான வைப்புக்காப்பீடு மற்றும் கடன் உறுதிக் கழக திருத்த மசோதாவை நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார்.

இது, வங்கியில் இருக்கும் வைப்புத் தொகைக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்க வகை செய்யும் மசோதாவாகும். இந்த மசோதாக்கள் மீது விவாதம் நடத்த எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார். ஆனால், எம்.பி.க்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் பெரும் அமளி நிலவியது. இதனால் இரு மசோதாக்களும் எந்தவிதமான விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டதாக மக்களவைத் தலைவர் அறிவித்தார்.

மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா பழங்குடியினருக்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதாவை அறிமுகம் செய்தார். இந்த மசோதாவை அறிமுகம் செய்த போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டதால், இந்த மசோதாவும் விவாதமின்றி நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.

அவையில் கோரிக்கையை ஏற்காமல், கடும் அமளிக்கிடையில் 10 நிமிடங்களில் மூன்று மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது, ஜனநாயக கொலை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர்.

இனி வாட்ஸ்அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: ஒன்றிய சுகாதாரத்துறை