மக்களவைக்கு தேர்தல் நெருங்கிக் இந்தியா நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி நேற்று அதிரடியாக தீவிர அரசியலில் இறங்கினார்.
 
அவர் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இத்தேர்தலில் பாஜகவையும், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி – பகுஜன் கூட்டணியை சமாளிக்க, இந்த வியூகத்தை காங்கிரஸ் வகுத்துள்ளது.
 
மக்களவைக்கு வரும் மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
உத்தர பிரதேசத்தில் மாநில கட்சிகள் தனித்தனியாக அணி திரண்ட வருகின்றன. குறிப்பாக, சமாஜ்வாடி – பகுஜன் – காங்கிரஸ் இடையே பலமான கூட்டணி ஏற்படும் என கருதப்பட்டது.
 
ஆனால், காங்கிரசை சேர்க்காமல் சமாஜ்வாடி- பகுஜன் கட்சிகள் மட்டும் கூட்டணி அமைத்துள்ளன. இதில், சிறிய கட்சியான ராஷ்டிரிய லோக்தளம் மட்டும் சேர்க்கப்பட்டு, அதற்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
 
உபி.யில் மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளில் பகுஜன் சமாஜும், சமாஜ்வாடியும் தலா 38 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி, சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதிகளில் இக்கட்சிகள் போட்டியிடவில்லை. நட்பு ரீதியாக அவற்றை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்துள்ளன.
 
நாட்டிலேயே அதிக தொகுதிகளைக் கொண்ட உபி.யில் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ, பெரும்பாலும் அந்த கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை காணப்படுகிறது.
 
இந்நிலையில் கொல்கத்தாவில் சில தினங்களுக்கு முன் நடந்த 22 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட மெகா கூட்டணி பொதுக்கூட்டத்திலும், பிரதமர் யார் என்பதை தேர்தல் முடிவுக்குப் பிறகு தீர்மானிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
 
தனியாக நின்று 2009ல் 22 இடங்களை கைபற்றிய காங்கிரஸ் தனது பலத்தை நிரூபிக்க உபியில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டியது அவசியமாகி உள்ளது.
 
இதன் தொடர்ச்சியாக சோனியாவின் மகளும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி (47), நேற்று அதிரடியாக தீவிர அரசியலில் இறங்கினார். உபி கிழக்கு பிரிவின் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி முதல் வாரத்தில், இந்த பொறுப்பை பிரியங்கா முறைப்படி ஏற்பார் என காங்கிரஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மக்களவை தேர்தலில் பாஜ.வுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தவும், உபி.யில் சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் அணிக்கு பதிலடி கொடுக்கவும் காங்கிரசுக்கு கூடுதல் பலம் சேர்க்கவே, தீவிர அரசியலில் பிரியங்கா இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
 
இதுவரை சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதிகளில் மட்டுமே பிரியங்கா பிரசாரம் செய்து வந்துள்ளார். தீவிர அரசியலில் அவர் ஈடுபட்டது கிடையாது. தற்போது அவர் அதிகாரப்பூர்வமாக தீவிர அரசியலில் இறங்கியிருப்பது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
 
பிரியங்காவின் வருகையால் காங்கிரஸ் புது தெம்பை பெற்றுள்ளது. மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா முக்கிய பங்கு வகிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அவருடைய தீவிர அரசியல் பிரவேசம். தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த சோனியா காந்தி, உடல்நிலை பாதிப்பால் அந்த பதவியில் தனது மகன் ராகுல் காந்தியை அமர்த்தியுள்ளார். இப்போது அவர், ஐமு கூட்டணியின் தலைவராக மடுமே இருக்கிறார். காங்கிரசின் பாரம்பரிய தொகுதியாக கருதப்படும் ரேபரேலியின் எம்பி.யாகவும் இருக்கிறார். உடல்நிலை பாதிப்பு காரணமாக, வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அவர் விலகுவார் என கருதப்படுகிறது. அதனால், ரேபரேலி தொகுதியில் பிரியங்கா களமிறக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
கணவர் வதேரா வாழ்த்து கடந்த 1994ல் ராபர்ட் வதேராவை மணந்து கொண்ட பிரியங்காவுக்கு, 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, பல்வேறு நில மோசடி ஊழலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
 
பிரியங்காவுக்கு பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரசின் முக்கிய பொறுப்புகளில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
 
அதன்படி, அரியானா மாநில பொதுச் செயலாளராக மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஏற்கனவே வகித்த வந்த உபி பொறுப்பு இரண்டாக பிரிக்கப்பட்டு பிரியங்காவுக்கும், உபி மேற்கு பிரிவு பொதுச் செயலாளராக ஜோதிராதித்யா சிந்தியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பொறுப்பேற்றுள்ளதால், அவர் வகித்த பொதுச் செயலாளர் பதவி கே.சி.வேணுகோபாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
பிரியங்கா காந்தி அப்படியே அவருடைய பாட்டியும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை போன்ற கம்பீரமான தோற்றம் கொண்டவர். சிறந்த நிர்வாக திறமையும் கொண்டவர். தைரியமான முடிவுகளை எடுக்கக் கூடியவராகவும் அறியப்படுகிறார்.
 
காங்கிரஸ் தலைவர்கள் அவரை ‘மற்றொரு இந்திராகாந்தி’யாகவே பார்க்கிறார்கள். எனவே, இந்த மக்களவை தேர்தலில் காங்கிரசின் பிரம்மாஸ்திரமாக அவர் கருதப்படுகிறார்.
 
பிரியங்கா காந்தி குறித்து பாஜ கருத்து பாஜ செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘‘ராகுல் தோல்வி அடைந்து விட்டார்; கட்சிக்கு முட்டுகொடுக்க அவரது குடும்பத்திலிருந்து வேறொருவர் வேண்டும் என்பதைத்தான் காங்கிரஸ் வெளிப்படையாக அறிவித்துள்ளது.
மெகா கூட்டணி கட்சிகள் அவரை நிராகரித்ததால், குடும்ப கூட்டணியை தேர்ந்தெடுத்து விட்டார் ராகுல். நேரு முதல் தற்போது வரை காங்கிரசின் தலைவராக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே உள்ளனர். இதுதான் பாஜவுக்கும் காங்கிரசுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்‘‘ என்றார்.
 
பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி கூறுகையில், ‘‘உபி.யில் தேர்தலில் பிரியங்கா எனக்கு உதவியாக இருக்கப் போவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மிகத் திறமையானவர். நாங்கள் எப்போதும் பின்னால் இருந்து விளையாட விரும்பவில்லை. குஜராத்தாக இருந்தாலும் சரி, உபி.யாக இருந்தாலும் சரி, எந்த இடத்திலும் களத்தின் முன்னால் நின்று விளையாடுவோம். உபியில் பாஜவை வீழ்த்த சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கூட்டணி சேர்ந்துள்ளன. அவர்களிடம் எனக்கு எந்த விரோதமும் இல்லை. காங்கிரசின் கொள்கைகளை நான் தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்வேன்’’ என்றார்.