மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான சென்னை PSBB ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜூன் 8 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் (PSBB) பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜகோபாலன். இவர் தனது வகுப்பு மாணவிகளுக்கு ஆன்லைனில் அரைகுறை ஆடையுடன் பாடம் நடத்துவது, ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவது போன்ற பாலியல் தொந்தரவுகள் கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இதுதொடர்பாக தற்போது படிக்கும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் தரப்பிலிருந்தும் இணையதளங்களில் ஆசிரியர் ராஜகோபாலன் மீதான புகார்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதுகுறித்து முன்னாள் மாணவிகள் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் வெடித்தது.
இதனையடுத்து திமுக மக்களை உறுப்பினர் கனிமொழி எம்.பி, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். பிரச்னை தீவிரமடைந்ததை அடுத்து விசாரணை நடத்துவதற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் பள்ளிக்கு சென்றார். ஆனால் அவர் விசாரணை நடத்த பள்ளி நிர்வாகத்தினர் அனுமதிக்கவில்லை.
தேசிய பாலியல் குற்றவாளிகள் பட்டியலை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடுவதால் இது போன்ற குற்றவாளிகள் மீண்டும் குழந்தைகள்/சிறுவர்கள் இருக்கும் இடங்களில் பணிக்கு சேர்வது தடுக்கப்படும். (4/4) #psbbschool
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 24, 2021
இப்பிரச்னையில் பள்ளி நிர்வாகம் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து அழுத்தம் அதிகரிக்கவே ராஜகோபாலனை பணியிடை நீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட ராஜகோபாலனிடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி, தி.நகர் துணை ஆணையர் ஹரிஹரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து ராஜகோபாலனை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் நங்கநல்லூரில் உள்ள ராஜகோபாலன் வீட்டிலிருந்த அவரது செல்போன், லேப்டாப் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஆய்வு செய்தபோது வாட்ஸ் அப் மெசேஜ்களை ராஜகோபாலன் டெலிட் செய்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சைபர் க்ரைம் காவல்துறையின் உதவியுடன் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை காவல்துறையினர் ரெக்கவர் செய்தனர்.
ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் அவர் 27 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில், ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்ததாகவும், வாட்ஸ்அப்பில் சாட் செய்யும்படி மாணவிகளை கட்டாயப்படுத்தியதாகவும்,
அந்தரங்க புகைப்படங்களை அனுப்பும்படி வற்புறுத்தியதாகவும் ராஜகோபாலன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக, அந்தப்பள்ளியைச் சேர்ந்த மேலும் சிலரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் புகார் அளிக்க முன்வரவேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. துணை ஆணையர் ஜெயலட்சுமியின் கைபேசி எண் 94447 72222-ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகார்தாரர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ உள்பட 5 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ராஜகோபாலனை ஜூன் 8 ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Have written to Hon'ble Union Minister for Education Thiru @DrRPNishank requesting him to direct @cbseindia29 to initiate appropriate enquiries into the #psbbschool sexual harrasment issue & to probe lapses in mechanism to address such issues at the school @PMOIndia @Anbil_Mahesh pic.twitter.com/TwlmK717Vg
— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) May 24, 2021
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிசாங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதேபோல் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர் ராஜகோபாலன் மீதான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படம். மேலும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க தனிக்குழு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
‘அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது’- சர்ச்சையால் கருத்தை திரும்பப்பெற்ற பாபா ராம்தேவ்