டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் மே 26 (நாளை) கருப்பு தினப் போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், திரினாமூல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான 12 கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியிலிருந்து டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயச் சங்கத் தலைவர்களுடன் மத்திய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து விவசாயிகள் பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் தொடர்ந்து காலத்தைக் கடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் 2வது அலை வேகமாகப் பரவரும் நிலையிலும், விவசாயிகள் தங்களின் கோரிக்கையில் உறுதியுடன் போராடி வருகிறார்கள். கொரோனாவால் விவசாயிகள் போராட்டத்தையே மறந்துவிட்டது பாஜக மோடி அரசு.

டெல்லியிலேயே தங்கி போராடி வரும் விவசாயிகள் போராட்டம் பல மாதங்களாக நீடித்து வருகிறது. மே 26 ஆம் தேதியுடன் இப்போராட்டம் ஆறு மாதங்களை எட்டுகிறது. இந்நிலையில் தங்கள் போராட்டத்தை தீவிரபடுத்தும் வகையில், மே 26 ஆம் தேதி அன்று நாடு தழுவிய கருப்பு தினப் போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் மே 26 ஆம் தேதி தான் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற நாள். அவர் பதவி ஏற்று 7 வருடங்கள் கடந்த அதே தேதியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் போராட்டத்தை வழிநடத்தி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய சங்கங்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விவசாயிகளின் கருப்பு தினப் போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், திரினாமூல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான 12 கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூட்டறிக்கை விடுத்துள்ளார்கள்.

அதில் “மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற்றாக வேண்டும். இந்த மூன்று சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளை கொரோனா பாதிப்பில் இருந்து மீட்டாக வேண்டும். சுவாமிநாதன் ஆணையம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தது.

அதனை பாஜக அரசு பின்பற்ற வேண்டும். விவசாயிகளோடு பாஜக அரசு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். அதுவரை விவசாயிகளின் போராட்டத்துக்கு எங்களது ஆதரவு தொடரும்” என்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் அறிவித்துள்ளார்கள். இதனால் மீண்டும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

‘அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது’- சர்ச்சையால் கருத்தை திரும்பப்பெற்ற பாபா ராம்தேவ்