நாட்சியாள் பிலிம்ஸ் சார்பில் எம்.எஸ்.ராஜ், தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மெரினா புரட்சி”. பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி கடந்த ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியை பேசும் வகையில் இப்படம் உருவாகியிருக்கிறுது.
இப்படம் வெளியானதும், ஜல்லிக்கட்டுக்கு தடைக்கு காரணமாக இருந்த சில தமிழர்களின் முகமூடி கிழியும் என இயக்கும் எம்.எஸ்.ராஜ் தெரிவித்திருந்தார். இப்படத்தில் மெரீனா போராட்டம் உருவானது எப்படி என்பது முதல் இறுதி நாளில் ஏற்பட்ட வன்முறை வரை அழுத்தமாக பதியப்பட்டு இருந்தது.
ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றிய புலனாய்வு படமாக உருவாகி இருந்த மெரினா புரட்சி படம் தணிக்கை குழுவுக்கு சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த மத்திய தணிக்கை குழு படத்திற்கு தடை விதித்திருக்கிறது.
மெரினா புரட்சி படத்திற்கு தடைவிதித்துள்ள தணிக்கை வாரியம், மும்பையில் உள்ள மறு சீராய்வு கமிட்டிக்கு அனுப்பி இருக்கிறார்கள். மறு சீராய்வு குழுவில் மெரினா புரட்சி திரைப்படத்திற்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து எம்.எஸ்.ராஜ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் “தமிழர்களின் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தையும், அதன் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகளையும் பேசும் ‘மெரினா புரட்சி’ திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை துறை தடை விதித்திருக்கிறது. மறுசீராய்வு குழுவில் மெரினா புரட்சி திரைப்படத்திற்கு நீதி கிடைக்கும். உண்மை வெல்லும் என்று நம்புகிறோம்” எனக் கூறியிருக்கிறார்.