தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 21 வயது பொறியல் பட்டதாரி பெண் சாருலதா வெற்றி பெற்றுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி மற்றும் உள்ளூர் செல்வாக்கு உள்ள சுயேட்சைகள் என பலமுனைப் போட்டி நிலவியது.
தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 74 மையங்களில் நேற்று காலை (12.10.2021) முதல் எண்ணப்பட்டு வருகின்றன. விடிய விடிய வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வரலாறு காணாத அளவில் வெற்றி பெற்றுள்ளது.
வாக்காளர்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்று தேர்தல் ஆணையம் ஒவ்வொரு முறையும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. அதன்படி இந்த தேர்தலில் ஒரு ஓட்டும், 2 ஓட்டும் கூட வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயம் செய்துள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்ட 21 வயது இளம்பெண் சாருலதா என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பொறியியல் பட்டதாரியான சாருகலா தன்னை எதிர்த்து போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களை டெபாசிட் இழக்க வைத்தள்ளது பலரை ஆச்சிரியம் கொள்ள வைத்துள்ளது. சாருலதா 3336 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்று கொண்டார்.
இளம்பெண் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி கூறியுள்ளார் சாருலதா. மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவேன் என்றும் சாருலதா கூறியுள்ளார்.