தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவ- மாணவிகள் அனைவரும் தேர்ச்சி மற்றும் ஊரடங்கு முடிந்த பின்னர், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக தொடக்கக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2020-21 ஆம் கல்வி ஆண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுமைக்குட்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை இணையதளம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளித் தேர்ச்சி பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கை எடுக்க தேவையான அறிவுரைகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைச் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்களை deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிக்கையாக அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தளர்வில்லா ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. எனவே ஊரடங்கு முடிந்த பின்னர், பள்ளிகள் திறப்பது குறித்தும், மாணவர்களுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் பள்ளிகள் திறந்தவுடன் வழங்குவது குறித்தும் அறிவிக்கப்படும்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது நடத்துவது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனைக்கு பின் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு குறித்த அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என மத்திய அரசு கூறியுள்ளது. சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

குழந்தை திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் நடவடிக்கை- அமைச்சர் கீதா ஜீவன்