கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம், மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற, தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய,ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி குறைந்த விலையில் சுகாதாரமான முறையில் சானிட்டரி நாப்கின்களை உருவாக்கி இந்தியா முழுவதும் அதைப் பரவலாக வருகிறார்.

வணிகமுறையில் தயாரிக்கப்படும் நாப்கின்களை விட மூன்றில் ஒரு பங்கு விலையில் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றவர். வணிக நோக்கின்றி சேவை மனப்பான்மையுடன் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்ததற்காக இந்திய அரசு இவருக்கு பத்மஶ்ரீ் விருது வழங்கியுள்ளது.

உலகளவில் வழங்கப்படும் திரை விருதுகளில் ஆஸ்கார் விருதும் மிக முக்கியமான விருது. ஒவ்வொரு ஆண்டும் ஹாலிவுட் படங்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டுப் படங்களுக்கும் தனிப்பிரிவில் விருது வழங்கப்படுகிறது. இந்த 2019 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது அடுத்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி வழங்கப்பட இருக்கிறது.

இந்தாண்டு விருதுக்கான பட்டியலில் அருணாச்சலம் முருகானந்தம் பற்றிய ஆவணப்படம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவரைப் பற்றிய “பீரியட். என்ட் ஆஃப் செண்ட்டன்ஸ்” என்ற ஆவணப்படம் போட்டி பிரிவின் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு இல்லாததும், மாதவிடாயை தீட்டு எனத் தள்ளி வைக்கும் வழக்கமும் இன்னமும் பல மாநிலங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாதவிடாயின் போது முறையான நாப்கின்களை உபயோகிக்காமல் இருக்கும் வழக்கமும் உள்ளது. அந்த மூடநம்பிக்கைகளை ஒழிக்க பாடுபடும் முருகானந்தம்த்தின் அசாத்தியப் பணி குறித்து விளக்கும் ஆவணப்படத்தினை இயக்குனர் ரேய்கா ஜெட்டாப்சி எடுத்துள்ளார்.