திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவரது மூத்த சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி போர்க்கொடி தூக்கி உள்ளார். அவர் செப்டம்பர் 5-ல் சென்னையில் கருணாநிதி நினைவிடத்துக்கு, தனது ஆதரவாளர்களுடன் மாபெரும் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக, மதுரையில் உள்ள வீட்டில் தனது ஆதரவாளர்களை மு.க.அழகிரி நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதற்காக மதுரை சத்யசாய் நகரில் உள்ள தனது வீடு அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்கு நேற்று காலை 10.30 மணிக்கு மு.க.அழகிரி வந்தார். பிற்பகல் 12.30 மணி வரை ஆதரவாளர்கள் அவரைச் சந்தித்தனர். அழகிரியுடன் எப்போதும் உடன் இருக்கும் இசக்கிமுத்து, மன்னன், உதயகுமார், முபாரக் மந்திரி, எம்.எல்.ராஜ், ராஜாராம் மற்றும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், திமுகவில் பதவிகளைப் பெற முடியாதோர், பதவி பறிக்கப்பட்டவர்கள் எனப் பலர் சந்தித்தனர்.

அங்கு அழகிரியை சந்தித்து பேசிய ஒருவர் வருத்தமுடன் பகிர்ந்த விவரம் “அழகிரி சந்திக்கிறார் என்றால் எப்போதும், கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும். ஆனால், 200 பேர் கூட இல்லா கூட்டம் இல்லாதது வருத்தமே. யாரிடமும் உற்சாகம் தென்படவில்லை. திமுக கரை வேட்டி கட்டியவர்கள் மிக சொற்பமாகவே இருந்தனர்.

கடந்த 4 ஆண்டுகளாக கட்சியினரிடம் மட்டுமின்றி ஆதரவாளர்களிடம் இருந்தும் அழகிரி ஒதுங்கியே இருந்ததும் ஒரு காரணம். இத்தனை வாகனங்களில் அழைத்து வருமாறு மட்டும் தெரிவிக்கின்றனர்.தற்போதுள்ள சூழலில் எந்த நம்பிக்கையில் செலவுசெய்ய முடியும். திமுக ஆட்சியின்போதும், அழகிரி மத்திய அமைச்சராக இருந்தபோதும் அவரை சுற்றியிருந்த பலர் மட்டுமே சம்பாதித்தனர். செலவை அவர்கள் ஏற்கவேண்டும் அல்லது அழகிரியேசெலவு செய்ய முன்வரவேண்டும். இதுகுறித்து எந்தஉறுதியும் அளிக்கப்படவில்லை என்றார்

அப்போது திடீரென மதுரை மாநகர் பாஜக மாவட்டத் தலைவர் சசிராமன் மற்றும் நிர்வாகிகள் கும்பலாக அழகிரி வீட்டுக்கு வந்தனர். பாஜகவினர் வந்ததை பார்த்து அழகிரி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மதுரைக்கு நாளை வரும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழகிரிக்கு பாஜகவினர் நேரில் வந்து அழைப்பு விடுத்துவிட்டு சென்றனர்.