கருப்பு பணத்தை மீட்கவும், கள்ள நோட்டை ஒழிக்கவும் பழைய 500 மற்றும் 1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இவற்றை வங்கிகளில் மாற்ற 50 நாள் அவகாசம் தரப்பட இதன்படி பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்தனர். அதோடு, பணம் மாற்றவும் எடுக்கவும் தினமும் புதிது புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முதலில் ₹4,000க்கு மட்டும் ரொக்கமாக வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஏடிஎம்களில் பணம் எடுக்கும் உச்சவரம்பு 2,000 என நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் வங்கிகளில் பணம் எடுக்க தினசரி உச்சவரம்பு 10,000 ஆகவும், வார உச்சவரம்பு 20,000 ஆகவும் முடிவு செய்யப்பட்டது. பின்னர் வங்கிகளில் ரொக்கமாக பணத்தை மாற்ற உச்சவரம்பு 4,000ல் இருந்து 4,500ஆக உயர்த்தப்பட்டது. ஏடிஎம்களில் பணம் எடுக்க உச்சவரம்பு 2,000ல் இருந்து 2,500ஆகவும், வார உச்சவரம்பு 24,000 ஆகவும் உயர்த்தப்பட்டது.

பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது, பணம் இருந்தும் வாழ்வாதாரத்தை தொலைத்த நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். பெட்ரோல் பங்க், மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், பஸ், ரயில் டிக்கெட், சுங்கச்சாவடி, அரசுக்கு வரி, நீதிமன்ற அபராதம், கட்டணம் செலுத்துதல், கல்விக்கட்டணம் போன்றவற்றுக்கு செல்லாத நோட்டு பயன்படுத்த அவகாசம் அளிக்கப்பட்டது.

ரொக்கமாக பணத்தை மாற்றுவதில் முறைகேடு நடக்கலாம் என்பதால், பணம் மாற்ற வரும் வாடிக்கையாளர்களின் விரலில் அழியாத மை வைக்க வேண்டும் என்று நவம்பர் 15ம் தேதி உத்தரவிடப்பட்டது. பின்னர் விவசாயிகள் வாரத்துக்கு ₹50,000 , திருமண செலவுகளுக்கு ₹2.5 லட்சம் வரை அனுமதிக்கப்பட்டது. நவம்பர் 24ம் தேதி பழைய 500, 1,000 நோட்டு ரொக்கமாக மாற்றுவது நிறுத்தப்பட்டது.

படிப்படியாக டிசம்பர் 15 வரை இது நீட்டிக்கப்பட்டது. ஆனால், இவற்றில் சில சலுகைகள் முன்கூட்டியே வாபஸ் பெறப்பட்டன. அனைத்து சலுகையும் டிசம்பர் 15ம் தேதியோடு முடிந்துவிட்டது. இப்படி, பழைய ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 43 நாட்களில் 60 மாற்றங்களை ஏற்படுத்தி மக்களை குழப்பியது.

பண மதிப்பு நீக்கத்தால் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் அழித்து விடுவார்கள். குறைந்த பட்சம் 3 லட்சம் கோடி வராமல் இருக்கும் என்று மத்திய அரசு தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. இப்படி மக்களை பாடாய் படுத்திய பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு வங்கிகளில் பொதுமக்கள், நிறுவனங்கள் டெபாசிட் செய்த பழைய ₹500, ₹1,000 நோட்டு எண்ணும் பணியை ரிசர்வ் வங்கி நிறைவு செய்துள்ளது.

இதன்படி பணமதிப்புநீக்கம் செய்தபோது புழக்கத்தில் இருந்த நோட்டில் 99.3 சதவீதம் வங்கிகளுக்கு வந்து விட்டதாகவும், 0.7 சதவீதமான வெறும் 10,720 கோடி மட்டுமே வரவில்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பணமதிப்பு நீக்கத்தால் பல லட்சம் கோடி கருப்புப்பணம் வங்கிக்கு வராமலேயே அழிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏறக்குறைய அனைத்து பணமும் வங்கியில் மாற்றப்பட்டு விட்டதால் இந்த திட்டம் படுதோல்வி அடைந்து விட்டதை காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

மக்களவை காங்கிரஸ் தலைவர் கார்கே கூறிய விவரமானது : பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை ஒழிக்கும் என பா.ஜ அரசு கூறியது. அது தவறு என ரிசர்வ் வங்கி அறிக்கை நிருபித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பின், ‘‘நான் ஏதாவது தவறு செய்திருந்தால், என்னை தண்டியுங்கள்’’ என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நான் அவரிடம் கேள்வி எழுப்புவேன் என்றார்

இதேபோல் பல்வேறு கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, மத்திய நிதியமைச்சகத்தின் கீழான நாடாளுமன்ற நிலைக்குழு, பணமதிப்பிழப்பு தொடர்பான தனது அறிக்கையை தாக்கல் செய்வதை ஒத்திவைத்துள்ளதால் குழுவில் இடம்பெற்றுள்ள பாஜ எம்.பி.க்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அறிக்கை தயாரிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், ‘‘குழுவில் அனைத்து உறுப்பினர்களிடமும் தீவிரமாக ஆலோசித்தபின்னர் இதுகுறித்து அறிக்கை தயாரிக்கப்படும்’’ என்று அதன் தலைவர் வீரப்ப ெமாய்லி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா இரண்டு கேள்வி எழுப்பியுள்ளார். தனது பேஸ்புக் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 99.3 சதவீதம் அளவிலான பணம் வங்கிகள் மூலம் மீண்டும் நடமாட்டத்தில் விடப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. என்னுடைய முதல் கேள்வி, கருப்புப் பணம் எங்கே போனது

பெரும் பண முதலைகள் தங்களிடம் இருந்த கருப்புப்பணத்தை எல்லாம் சப்தமில்லாமல் வெள்ளையாக மாற்றிகொள்வதற்குதான் மத்திய அரசு இந்த பண மதிப்பிழப்பு திட்டத்தை கொண்டு வந்ததா? என்பது எனது இரண்டாவது கேள்வி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி தந்த விவரத்தின் தொகுப்பின் மூலம் அறிய வருவது :
புழக்கத்தில் இருந்தவை : ரூ.15.41 லட்சம் கோடி
வங்கிக்கு வந்தவை : ரூ.15.31 லட்சம் கோடி
மத்திய அரசு எதிர்பார்த்த கருப்பு பணம் : ரூ.3 லட்சம் கோடி
வராத பணம் : ரூ.10,720 கோடிதான்
புதுநோட்டு அச்சடிக்க செலவு : ரூ.12,877 கோடி
மொத்ததில் 2157 கோடி மக்களின் வரி பணம் அரோகரா