நடிகரும், அதிமுக சின்னத்தில் வென்ற சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார்.
மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தர். யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இதனால் கருணாஸ் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்த விவரம் ” நான் பேசிய முழு வீடியோவையும் கேட்டு விட்டு என்னை விமர்சியுங்கள். அன்றைய கூட்டத்தில் பலரை ஒருமையில் பேசியதற்காக எனது மனைவியிடம் அன்றே வருத்தத்தை தெரிவித்தேன்.
தவறு செய்த அதிகாரிகளை தான் மேடையில் விமர்சித்தேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு மறுப்பது ஏன்?
கூவத்தூர் சம்வபம் தொடர்பாக பேசுகிறீர்கள். ஜனாதிபதியை நான் தான் ஓட்டு போட்டு தேர்வு செய்தேன். மறுக்க முடியுமா?, அதே போலதான் கூவத்தூரிலும் முதல்வரை தேர்வு செய்தேன்.
முக்குலத்தோர் புலிப்படை இளைஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துகின்றனர். பொய் வழக்கு போடுகின்றனர். நான் யாரையும் தவறாக பேசவில்லை.
குறிப்பிட்ட சமூகம் குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு பேசியதற்கான ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன் ” என அவர் பேசினார்.
காவல்துறையை தவறாக பேசிய பாஜக பொது செயலாளர் மீதும் கருணாஸ் மீதும் சமூகவலைதளத்திலே கண்டங்கள் குவிந்து வருகிறது குறிப்பிடதக்கது