கொரோனா வேகமாக பரவிவரும் சூழலில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை நிலவுவதால் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அமீரக இந்தியத் தூதர் எச்சரித்துள்ளார்.

இந்திய தலைநகர் டில்லியில் உள்ள நிஜாமுதின் மசூதியில் நடந்த மத நிகழ்வில் கலந்துக் கொண்டவர்கள் மூலமாக இந்தியாவில் கொரோனா அதிக அளவில் பரவியது என்று குறிப்பாக பாஜக ஆதரவாளர்கள் விஷம பிரச்சாரம் செய்தனர். இந்திய ஊடகங்களும் அதே கருத்தை செய்தியாகவும் வெளியிட்டன. இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பின்பற்றும் பாஜக ஆதரவாளர்கள் கொரோனாவை மதத்துடன் கலக்க வேண்டாம், இது மத ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை எதிர்ப்பதாகப் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

சமீபத்திய நாட்களில், கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து இஸ்லாமியவாத பதிவுகள் மூலம் வெறுப்பை பரப்புவதற்காக பல இந்திய வெளிநாட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஆர்.எஸ்.எஸ் சித்தந்தத்தை பின்பற்றும், ஒரு பிரபல கேரள தொழிலதிபர் சோஹன் ராவ், கொரோனா வைரஸ் குறித்து எழுதிய கவிதை, மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சையை எழுப்பியது.

அவர் தனது மலையாள மொழியில், ‘விடி ஜன்மேன் (முட்டாளின் வாழ்க்கை)’ என்ற தலைப்பில், எழுதிய சிறுகதை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கவிதை எந்த சமூகத்தையும் குறிப்பிடவில்லை, ஆனால் பின்னணியில் இயங்கும் காட்சிகள், இந்தியாவில் வைரஸ் பரப்புவதாக சொல்லப்பட்ட தப்லிகி ஜமாஅத்தின் உறுப்பினர்களைக் குறிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

Sohan Roy, founder chairman and CEO of Sharjah-headquartered Aries Group and director of the sci-fi movie DAM 999

இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு அந்நாட்டு அரசு, மத ரீதியாக புண்படுத்துபவர்களுக்கு விசா ரத்து செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைவிடுத்தது.

இதனையடுத்து, சோஹன் ராவ் தனது கவிதையில், தீங்கிழைக்கும் நோக்கம் எதுவும் இல்லை. தவறு நடந்தது என்பதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். எந்தவொரு மத உணர்வையும் நான் அறியாமல் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். மக்கள் புண்படுத்தப்பட்டதை அறிந்தவுடன் நான் ஒரு பேஸ்புக் லைவ் வீடியோ செய்து மன்னிப்பு கேட்டேன்’ என்று  கூறியுள்ளார்.

இந்நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமின்றி துபாய் உள்ளிட்ட மற்ற மத்திய கிழக்கு நாட்டை சேர்ந்த முக்கிய மன்னர் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் இந்தியாவின் செயலை கண்டிக்க தொடங்கி உள்ளனர். இந்தியாவில் இஸ்லாமியர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்று விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.

தொடர்ந்து ஐக்கிய அரபு நாடுகள் கண்டனங்கள் எழுப்பிய நிலையில், பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘கோவிட் 19 பாதிக்கும் போது இனம்,மதம், நிறம், சாதி குலம், கோத்திரம், மொழி, எல்லை எதையும் பார்க்காது. நாம் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றுடன் பொறுப்பாகவும் ஒழுக்கமாகவும் நடந்துக் கொள்ள வேண்டும். நாம் என்றும் இணைந்து இருப்போம்’ என பததிவிட்டுள்ளார்.

அமீரக இந்தியத் தூதர் பவன் கபூர் தனது டிவிட்டரில், ‘இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் மதப்பாகுபடுகளுக்கு எதிரான மனநிலையைப் பகிர்ந்துக் கொள்கின்றன. பாகுபாடு என்பது நமது சட்ட விதிகளுக்கும் ஒழுக்க முறைகளுக்கும் எதிரானவை, அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இதை உணர்ந்து இந்தியப் பிரதமர் கூற்றுப்படி கவனமாக இருக்க வேண்டும்’ என கூறியுள்ளார் .

இந்நிலையில், பாஜகவின் மக்களவை உறுப்பினர் தேஜஸ்வீ சூர்யா தனது பழைய ட்விட்டர் பதிவில், அரேபியப் பெண்களைக் குறித்து ஆபாச கருத்து தெரிவித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அமீரக தலைவர்கள் என பலரும் பகிர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.