தன் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றால் ரூ. 5 கோடி தருவதாக, பாதிக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரியின் சகோதரருக்கு பேராயர் பிராங்க்கோ ஆசை காட்டுவதாக புகார் கூறப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க பேராயரான பிராங்க்கோ முலாக்கல் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அதில், 2014-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை பல்வேறு தருணங்களில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கன்னியாஸ்திரி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த புகார் அளிக்கப்பட்டு 75 நாள்களுக்கு மேலாகியும் பேராயர் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து தொடர்ந்து 4 நாள்களாக கொச்சியில் கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தனக்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்ட பேராயரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் இந்தியாவுக்கான வாடிகன் தூதர் கியாம்பெடிஸ்டா டிக்வட்ரோவுக்கு காணியாஸ்திரி கடிதம் எழுதியுள்ளார். கடந்த 8-ம் தேதி அனுப்பிய இக்கடிதத்தின் நகலை செய்தியாளர்களிடம் செவ்வாய்கிழமை அந்த கன்னியாஸ்திரி வழங்கினார்.
அதில், அரசியல், பணபலத்தின் மூலம் தனக்கு நீதி கிடைக்கவிடாமல் தடுப்பதாக பேராயர் மீது குற்றம்சாட்டியுள்ளார். இக்கடிதத்தின் நகல் இந்திய கத்தோலிக்க பேராயர்களின் கூட்டமைப்பின் (சிபிசிஐ) தலைவர் கார்டினல் ஆஸ்வால்டு கிரேஷியஸ் மற்றும் டெல்லி மெட்ரோபாலிட்டன் பேராயர் அனில் கெளட்டோ உள்பட 21 பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, பேராயர் பிராங்க்கோ முலாக்கல் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், எனக்கு எதிராக சதி நடக்கிறது. தேவாலயத்திற்கு எதிரானவர்கள் தான் என் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். முன்பு ஒருமுறை அந்த கன்னியாஸ்திரியின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து அவரை கண்டித்தேன். அதன் காரணமாகவே என் மீது புகார் கூறி வருகிறார். எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால் காவல்துறையினர் என்னை இதுவரை கைது செய்யவில்லை’ என்றார்.
இந்நிலையில் தன் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றால் ரூ. 5 கோடி தருவதாக, பாதிக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரியின் சகோதரருக்கு பேராயர் பிராங்க்கோ ஆசை காட்டுவதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரர் கூறும் பொழுது, பிராங்கோ முலக்கல் மற்றும் இரண்டு பாதிரியார்கள் தன்னையும், தனது நண்பர்களையும் அணுகி அவர் மீதான புகாரை வாபஸ் பெற்று கொண்டால் ரூ.5 கோடி தருவதாக ஆசை காட்டினார் என்று தெரிவித்துள்ளார் இதன் காராணமாக மேலும் பரபரப்பை உண்டாகி உள்ளது .