14 ஆண்டுகள் தண்டனை காலம் முடிந்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அவசியமில்லை என ஹரியான அரசு கடந்த 2008 ஆம் ஆண்டு கொள்கை திட்டத்தை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையில், 14 ஆண்டுகள் தண்டனை காலம் முடிந்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரைக் கொண்ட அமர்வு அளித்துள்ள விளக்கத்தில், “ஆயுள் தண்டனை கைதிகளை 14 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை செய்ய, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை.

இருப்பினும் அரசியலமைப்பு சட்டம் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி 14 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை செய்யலாம். ஆனாலும் முதல்வர் தலைமையிலான மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் மட்டுமே விடுதலை செய்யலாம்” என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதன்படி, ஆயுள் தண்டனை கைதி ஒருவருக்கு மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க விரும்பினால் 14 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432வது பிரிவின் கீழ் அவரை விடுதலை செய்யலாம். ஆனால் 14 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை செய்ய விரும்பினால் ஆளுநருக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தி, அவரை விடுதலை செய்யலாம்’ என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறையில் தண்டனை பெறும் அனைத்து கைதிகளுக்கும் இந்த திட்டத்தை பாகுபாடில்லாமல் அமல்படுத்த வேண்டும் என்றும், அரசியலமைப்பு சட்டம் 161வது பிரிவின்படி இந்த திட்டத்தை திருத்தியமைக்கும் வாய்ப்புகளை கண்டறிய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

ராணுவ தளவாட துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் மசோதா நிறைவேற்றம்: ஒன்றிய மோடி அரசு