வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் 59 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 76 விவசாயிகள் உயிரிழந்து உள்ளனர்.

மத்திய அரசு வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப்பெற முன்வராததால், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இதுவரை 10 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்து உள்ளது. இந்நிலையில் இன்று (ஜனவரி 22) விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11 ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்தவித உடன்பாடும் எட்டவில்லை.

இதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக வரை வேளாண் சட்டங்களை முழுவதும் ரத்து செய்யவேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், சட்டத்தில் மாற்றம் கொண்டுவர தயாராக இருப்பதாகவும்,

சட்டங்களை 2 ஆண்டுகளுக்கு அமல்படுத்தாமல் காலதாமதம் செய்வதாகவும், இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் மத்திய அரசின் இந்த கோரிக்கையை பரீசிலிக்கும்படி மத்திய அமைச்சர்கள் எங்களிடம் கூறினர்.

நாங்கள் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என கூறி எங்களது கோரிக்கையை பரீசிலனை செய்யும்படி அரசிடம் கோரிக்கை விடுத்தோம். உணவு இடைவேளைக்கு பின் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என விவசாய சங்க பிரதிநிதிகள் காத்திருந்தனர்.

சுமார் 3 1/2 மணிநேரம் கழித்த அமைச்சர்கள் அரசின் கோரிக்கையை பரீசிலனை செய்யும்படியும், பேச்சுவார்த்தையை முடித்துக் கொள்வதாகவும் கூறிவிட்டு சென்றுவிட்டார். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் தேதி குறித்து அரசு அறிவிக்கவில்லை. இது விவசாயிகளை அவமதிக்கும் செயல்” என்று விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது 76 விவசாயிகள் இறந்துள்ளனர். டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு நாங்கள் அரசு வேலை வழங்குவோம் என்று அறிவிக்கிறேன்” என்று பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஒன்றரை ஆண்டு வேளாண் சட்டம் நிறுத்திவைப்பு சலுகையை நிராகரித்த விவசாயிகள்