பாதுகாப்பு போன்ற தேவைப்படும் துறைகளில் மட்டுமே பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும், மற்ற அனைத்து பொதுத்துறைகளும் தனியார் மயமாக்கப்படும் என 5-ம் கட்ட அறிவிப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்தாவது நாளாக இன்று நிலம், பணப்புழக்கம், தொழிலாளர் நலன், மருத்துவம்,மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டம், கல்வி, பொதுத்துறை உள்பட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க: ‘சுய சார்பு இந்தியா’ திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் கையில் முக்கிய துறைகள்

அதில், டிஜிட்டல் முறையில் கல்வி கற்க இ-வித்யா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டும்.

மாணவர்களுக்குக் கல்வி தொடர்பாக உதவ சுயம் பிரபா டி.டி.எச் சேனல் தொடங்கப்பட்டு இருக்கிறது. இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு இது உதவும்.

இ-வித்யா என்ற இந்தத் திட்டத்தின் கீழ் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல் தொடங்கப்படும்.

மே 30ம் தேதி முதல் ஆன்லைனில் பாடம் நடத்த 100 முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 2025க்குள் அனைத்து குழந்தைகளும், 5ம் வகுப்பு படிப்பதை உறுதி செய்யும் திட்டம் டிசம்பரில் அறிமுகம் செய்யப்படும்.

பாதுகாப்பு போன்ற தேவைப்படும் துறைகளில் மட்டுமே பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும். மற்ற அனைத்து பொதுத்துறைகளும் தனியார் மயமாக்கப்படும். கட்டுப்பாடுகள் இன்றி அனைத்து துறைகளிலும் தனியாருக்கு அனுமதிக்கப்படும்.

ஒரே துறையில் 4க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தால் அவை ஒன்றிணைக்கப்படும். பொது முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் எவை.. தனியார் முதலீட்டுக்கு அனுமதிக்கப்படாத பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து அரசாணை வெளியிடப்படும்.

அனைத்து மாவட்டங்களில் தொற்றுநோய் தடுப்பு மையம். பொது சுகாதார ஆய்வு மையங்களை அனைத்து வட்ட அளவிலும் அமைக்கப்படும்.

சுகாதார நடவடிக்கைகளுக்கு இதுவரை 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேப்போல், மாநிலங்களுக்கு இதுவரை 4,113 கோடி ரூபாய் நிதியுதவி விடுவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக 61000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் இப்போது கூடுதலாக 40000 கோடி கூடுதல் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் திவால் சட்டம் தொடர்பான விதிமுறைகளில் தளர்வு உருவாக்கப்படும். நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கும் காலம் 6 மாதத்திலிருந்து ஓராண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கம்பெனி சட்டத்தின் கீழ் நிறுவனங்கள் தொழில்நுட்ப ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் ஏதேனும் விதிமுறை மீறல் செய்திருந்தால் அது குற்றமாகப் பார்க்கப்படாது.

பாதிக்கப்பட்டவர்கள் சமரசத்திற்கு முற்படும் சட்டமான கம்பௌண்டபிள் குற்றங்களில் 7 குற்றங்களை நீக்கி அவற்றில் 5 குற்றங்களுக்கு வேறு விதமான கட்டமைப்புக்குள் கொண்டு வரவுள்ளனர்.

மாநிலங்களுக்கான கடன் வரம்பு 3% ஆக இருந்த நிலையில் 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2020-21 ஆம் நிதியாண்டில் மாநிலங்கள் தங்கள் உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை உலக நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம்.

மே 16ஆம் தேதி வரை 8.19 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக தலா ரூ.2,000 வீதம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

அதேப்போல், 20 கோடி பெண்களுக்கு ஜன்தன் வங்கியில் 10 ஆயிரத்து 25 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு 3,950 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கான ரயில் கட்டணத்தில் 85% தொகையை மத்திய அரசும், 15% தொகையை மாநில அரசும் வழங்கியது.

உஜ்வாலா திட்டத்தின் மூலம் 6.81 கோடி மானியமில்லாத சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

நெருக்கடியான சூழலில் டிஜிட்டல் பரிவர்த்தனையால் பலன் கிடைத்துள்ளது.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள் சுமார் 11.08 கோடிக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. PPE எனப்படும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் 51 லட்சமும், N-95 மாஸ்க்குகள் 87 லட்சமும் விநியோகிக்கப்பட்டு உள்ளன, என்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்புகள் இந்தியாவையே தனியாருக்கு பங்கிட்டு விற்பதைப் போல இருப்பதாக பொருளாதார வல்லுநர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.