நியூட்டன் மீது ஆப்பிள் விழுந்தது, பித்தாகரஸ் தேற்றம் உருவானது எல்லாம் போலியான செய்தி. பித்தாகரஸ் தேற்றம், புவி ஈர்ப்பு விசை எல்லாம் வேத கால கணிதத்தில் உள்ளன என்று கர்நாடக பாஜக அரசு அமைத்த தேசிய கல்விக் கொள்கை குழு அறிக்கை அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய பாஜக அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதற்கு கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஒன்றிய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

பல்வேறு பாஜக ஆளும் மாநிலங்களில் ஏற்கனவே புதிய தேசிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்துள்ள நிலையில், மற்ற மாநிலங்களில் புதிய கல்விக் கொள்கையை திணிக்க ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில், மாணவர்களுக்கான புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கையை தயாரிக்க மாநில அரசு தரப்பில் 26 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய பரிந்துரைகள் பற்றி ஒன்றிய அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது.

அந்த அறிக்கையில் கல்வியை முன்னேற்ற கூடிய அறிவிப்புகள் பெரிதாக இல்லாத நிலையில், கல்வியை பின்னோக்கி கொண்டு செல்லக்கூடிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் குறிப்பாக நியூட்டன் மீது ஆப்பிள் விழுந்தது, பித்தாகரஸ் தேற்றம் உருவானது எல்லாம் பொய். பித்தாகரஸ் தேற்றம், புவி ஈர்ப்பு விசை எல்லாம் வேத கால கணிதத்தில் உள்ளன என்றும் கூகுளில் இதற்கான தரவு உள்ளது என்றும் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மாணவர்கள், தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தை பயில வேண்டும் என்றும், மனுஸ்மிருதி மற்றும் பூத-சாங்க்யா போன்ற புராதன கணக்கு முறைகளை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் குழுவின் தலைவர் வேணுகோபால் கூறுகையில், “இந்த புதிய கல்விக் கொள்கை அறிக்கையை வாரணாசியில் உள்ள ஐஐடி பேராசிரியர் வி.ராமநாதன் தலைமையிலான குழு தயாரித்தது. புவி ஈர்ப்பு விசை மற்றும் பித்தாகரஸ் தேற்றம் எல்லாம் வேத கால கணிதத்தில் உள்ளன என்று கூகுளில் கூட சில தரவுகள் உள்ளன. இது ஒவ்வொருவரின் பார்வையை பொறுத்தது. இதனை நீங்கள் நம்பலாம், நம்பாமலும் போகலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கல்விக் கொள்கை குறித்த கர்நாடஜ அரசின் பரிந்துரைகள் மற்றும் அறிக்கைகளுக்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். யார் பதிவிட்ட கருத்துக்களும் கூகிளில் இடம்பெறும் நிலையில், அதை ஒரு மாநில அரசின் கல்விக்கொள்கை குழு ஆதாரமாக குறிப்பிட்டுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக பலரும் இணையத்தில் கர்நாடக மாநில பாஜக அரசை விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.