கோவிட்-19 வைரஸின் புதிய திரிபு எனக் கருதப்படும் ‘D614G’ வகை பிறழ்வு மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை ‘சூப்பர் ஸ்பிரெட்டர்’ எனக் குறிப்பிட்டு கொரோனா தொற்றை விட 10 மடங்கு மிக வேகமாகப் பரவக்கூடியது என மலேசிய அரசு எச்சரித்துள்ளது.

மலேசிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், அண்மையில் தமிழகத்தின் சிவகங்கை பகுதியிலிருந்து மலேசியா திரும்பியவருக்கு, D614G வகை பிறழ்வுடன் கூடிய கொரோனா வைரஸ் திரிபு பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு D614G வகை பிறழ்வுடன் கூடிய கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மலேசியாவின் உலுதிராம் பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கும் இதேபோன்ற பாதிப்பு இருப்பதாக இன்று (ஆகஸ்ட் 16) தெரிவித்துள்ளது. இந்த புதிய D614G வகை தொற்றை மலேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

ஒரு தனி நபரிடம் இருந்து அதிகமானவர்களுக்கு இந்த வகை தொற்று 10 மடங்கு வேகமாகவும் மிக எளிதாகவும் பரவுவதால் இது ‘சூப்பர் ஸ்பிரெட்டர்’ (Super Spreader) எனக் குறிப்பிடப்படுகிறது.

இதுகுறித்து டாக்டர் நூர் ஹிஷாம் கூறும்போது, D614G வகை பிறழ்வுடன் கூடிய கொரோனா கிருமித் திரிபு பாதிப்பு பரவுவது கடந்த ஜூலை மாதம் தான் தெரிய வந்தது. எனவே தற்போதுள்ள தடுப்பு மருந்துகளால் இந்த வகை பாதிப்பை தடுக்க முடியுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே பொதுமக்கள் சமூக இடைவெளியே கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

எகிப்திலும் பாகிஸ்தானிலும் ஏற்கெனவே இந்த வகைத் தொற்றுப் பரவல் இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது மலேசியாவும் அப்பட்டியலில் இணைந்துள்ளது.

மலேசியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,200 ஆக உள்ளது. இவர்களில் 8,859 பேர் குணமடைந்துள்ளனர். 125 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மலேசியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: இஸ்ரேல்- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உடன்பாடு