10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த அனுமதி கோரி அரசுக்கு தமிழ்நாடு அரசு ஆசிரியகள் சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுத்தேர்வை அந்தந்த பள்ளிகளையே தேர்வு மையங்களாகப் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், “கொரோனா வைரஸ் மனிதகுலத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் மார்ச் 24 தேதி முதல் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்து மே 3ம் தேதி வரை நீட்டித்து நடைமுறையில் உள்ளநிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்துள்ளது.
மேலும் வாசிக்க: ஏப்ரல்-மே செமஸ்டர் தோ்வுகள் ஒத்திவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி
பெற்றோர்கள் கல்வியாளர்கள் மற்றும் பல அமைப்புகள் இதனை ரத்து செய்ய கேட்டுக் கொண்டனர். ஆனால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்லும் முக்கியத் தேர்வு என்பதால் ரத்து செய்ய முடியாது என்றும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி ஊரடங்கு முடிந்தவுடன் வெளியிடப்படும். தேர்வு ஒருநாள் விட்டு ஒருநாள் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், சமுக விலகலை கடைப்பிக்க வேண்டிய இக்கட்டான கட்டாயத்தில் இருக்கின்றோம். ஆதலால் மாணவர்கள், ஆசிரியர்கள் அலுவலக பணியார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக மாணவர்கள் பயிலுகின்ற பள்ளிகளிலேயே தேர்வை நடத்தவேண்டும்” என்று தமிழ்நாடு அரசு ஆசிரியகள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளனர்.