‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் ஓராண்டில் அதாவது 2024 ஆம் ஆண்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால் பாஜக ‘அரசு ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற அஸ்திரத்தை கையில் எடுத்து உள்ளது. ‘ஒரே நாடு ஒரே மொழி’, ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ வரிசையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முழக்கத்தை பாஜக தற்போது எடுத்திருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 5 மாநில சட்ட பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்தது. அப்போது காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவதில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுகவின் எடப்பாடி மற்றும் ஒபிஎஸ் தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

இதனையடுத்து ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சட்ட ஆணையத்தை ஒன்றிய சட்ட அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பி தங்களது கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

திமுக எம்.பி. வில்சன் இதுதொடர்பான கடிதத்தை டெல்லியில் உள்ள சட்ட ஆணையத்தில் நேரடியாக வழங்கி உள்ளார். மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரிமோட் வாக்களிக்கும் முறையை அனுமதிப்பது குறித்த தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கும் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பாக கட்சிகளின் கருத்துக்களை வழங்கக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி வரை அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் வழங்கிய நிலையில், அந்த கால அவகாசம் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தற்போதைய சூழலில் அதிமுக மட்டுமே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை ஆதரித்திருக்கும் நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.