கொரோனா வைரஸ் 2 ஆண்டுக்குள் முடிவுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் மொத்தம் 215 நாடுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. கொரோனா வைரஸால் உலக முழுக்க 2.34 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பு மருந்துகள் தீவிரமான மருத்துவப் பரிசோதனையில் இருக்கின்றன. 2021ம் ஆண்டு கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கு கிடைத்துவிடும் என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே கூறியுள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “கொரோனா வைரஸ் என்பது நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினையாகும். கடந்த 1918-ம் ஆண்டில் உலகையே உலுக்கியது ஸ்பானிஷ் ப்ளூ வைரஸ் காய்ச்சல்.
ஹெ1என்1 இன்ப்ளூயன்ஸா ஏ வைரஸ் எனப்படும் இந்த வைரஸ் 1918 பிப்ரவரி முதல் 1920 ஏப்ரல் வரை உலகையே உலுக்கி எடுத்தது. உலகம் முழுவதும் இந்த வைரஸால் 50 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். மனிதகுல வரலாற்றிலேயே இது மிகவும் மோசமான தொற்று என்று இன்றளவும் அஞ்சப்படுகிறது.
ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சல் பரவிய வேகத்தைவிட, இந்த கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதற்கு உலகமயமாக்கல், நெருங்கியதொடர்பு, போக்குவரத்து ஆகியவை காரணமாக அமைகின்றன.
ஆனால், ஸ்பானிஷ் ப்ளூ பரவியபோது குறைந்த அளவு தொழில்நுட்பம், மருத்துவக் கண்டுபிடிப்புகள் மட்டுமே இருந்ததால், அதை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் முடியவில்லை.
தற்போது நவீன தொழில்நுட்பம், மருத்துவக் கண்டுபிடிப்புகளால் 2 ஆண்டுகளுக்குள்ளாகவே கொரோனா வைரஸை நாம் முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியும் என நான் நம்புகிறேன். குறிப்பாக அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சி இருந்தால் நிச்சயம் சாத்தியமாகும்” இவ்வாறு டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொரோனா வைரஸின் மரபணு மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிகள் அதிகம் தேவை, அப்போதுதான் கொரோனா வைரஸ் மரபணு அளவில் எத்தகைய மாற்றம் அடைகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க: இந்தி தெரியவில்லை என்றால் வகுப்பை விட்டு வெளியேறுங்கள்- மத்திய ஆயுஷ் செயலாளர் ஆணவ பேச்சு