ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் யோகாவை நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் வகையில் யோகா சம்பந்தமான படிப்பு முடித்த 1.25 லட்சம் பேரை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நாடு முழுவதும் நியமிக்க திட்டமிட்டுள்ளது.

இதனையடுத்து 350 நியூரோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களை தேர்வு செய்து அவர்களின் பட்டியல் மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவர் என 38 யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களின் பெயர் பட்டியல் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநரகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 350 யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் கடந்த 18ம் தேதி முதல் நடைபெற்று வந்தன. கடைசி நாளான 20ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பித்தவுடன் மத்திய ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கோட்சே கலந்து கொண்டு இந்தியில் பேசியுள்ளார்.

இந்தப் பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட மருத்துவர்கள், ‘எங்களுக்கு இந்தி புரியவில்லை. ஆங்கிலத்தில் உரையாற்றுங்கள்’ என்று தமிழக மருத்துவர்கள் கேட்டுள்ளனர்.

மேலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் முறை என்று இருக்கும்போது யோகாவை மட்டுமே கூறுகிறீர்கள். இயற்கை மருத்துவத்தை புறக்கணிக்கிறீர்களா.. என்று ஆன்லைன் வகுப்பு கமாண்ட் பாக்சில் பதிவிட்டுள்ளனர்.

இதற்கு மத்திய ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கோட்சே, ‘இந்தி தெரியவில்லை என்றால் ஆன்லைன் வகுப்பை விட்டு வெளியேறுங்கள், கேள்வி கேட்டால் தலைமை செயலாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தமிழக யோகா மருத்துவர்களை மிரட்டியுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் பதவியில் உள்ள ராஜேஷ் கோட்சே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றவர். பாஜவின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு வேண்டியவர் என்பதால் அவர்களின் சிபாரிசில் மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் செயலாளராக உள்ள அரசு அதிகாரி, ஆணவத்துடனும், இந்தி மொழி வெறியுடனும் மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி, காங்கிரஸ், மதிமுக, பாமக உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க: ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு ஆதரவாக செயல்படும் ஃபேஸ்புக்; நேரில் ஆஜராக நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்