#MeToo மூலம் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்த பாடகி சின்மயி தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கிவிட்டதாக பரபரப்பை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தென்னிந்திய டப்பிங் கலைஞர் சங்க தலைவர் ராதாரவி மீது பாலியல் புகார் தெரிவித்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் தனது டுவிட்டரில், “ராதாரவிக்கு மலேசிய அரசு டத்தோ பட்டம் கொடுக்கவில்லை. நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி சான் ஆகியோரின் பெயர்கள் உள்ளதே தவிர ராதாரவியின் பெயர் இல்லை என்று புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். ராதாரவிக்கு டத்தோ பட்டம் வழங்கவில்லை என்பது போன்ற மலேகா அரசு அனுப்பி வைத்த கடிதத்தை சின்மயி ட்விட்டரில் வெளியிட்டு தான் பொய் சொல்லவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள நடிகர் ராதாரவி, “சின்மயி வைரமுத்துவை பிளாக் மெயில் செய்து பார்த்தார். அங்கு ஒன்றும் நடக்கவில்லை என்றதும் என் பக்கம் திரும்பிவிட்டார். மலேசியாவில் டத்தோ பட்டம் வழங்குவது யார் என்று கூட அவருக்கு தெரியவில்லை. நான் டத்தோ பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நான் தற்போது புதுக்கோட்டையில் உள்ளேன். சென்னைக்கு திரும்பி வந்ததும் டத்தோ பட்டம் பெற்றதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன். சின்மயி வெளியிட்டுள்ள கடிதம் போலி என்று சந்தேகப்படுகிறேன். சின்மயியை சும்மாவிட மாட்டேன். எனக்கு டத்தோ பட்டம் அளித்தவர்களே அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்” எனக் காட்டமாக பேசியுள்ளார்.