பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை #MeToo இயக்கம் மூலம் துணிந்து வெளியே சொல்வது அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள், பத்திரிகையாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சில தினங்களாக நடிகர் அர்ஜுன், சுசி கணேஷன், தியாகராஜன், வைரமுத்து உள்ளிட்ட பலர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஆஸ்கர் விருது பெற்றவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் #MeToo விவகாரம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள தனது கருத்தில், “#MeToo விவகாரம் தொடர்பாக வெளியாகும் பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கும் பொழுது அதிர்ச்சி அளிக்கிறது.

திரைத்துறையைப் பொறுத்த வரையில், நேர்மையாகவும், பெண்களை பெரிதும் மதிக்கும் துறையாகவும் செயல்படவே நான் விரும்புகிறேன். தைரியமாக பேசும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள். அனைவரும் பாதுகாப்புடன் பணியாற்றும் சூழலை நானும், எனது குழுவும் உருவாக்கி வருகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் பேச சமூக வலைதளங்கள் சுதந்திரம் அளிக்கிறது. ஆனால், அது தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதற்காக அதற்கு ஒரு இணைய நீதிமுறை கொண்டு வர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதிரியும், இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரைஹானா #MeToo பற்றி கூறுகையில், “பரப்புரைக்கு ஆதரவு தருகிறேன். பாலியல் துன்புறுத்தல்களை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. சுச்சி லீக்ஸ் வந்த போது, அந்த பெண்ணின் தைரியம் பிடித்திருந்தது. ஸ்ரீரெட்டியின் நிலைமை வருத்தம் அளித்தது. பாலியல் துன்புறுத்தல் நடந்த போதே சின்மயி அதை பற்றி பேசியிருக்க வேண்டும். இப்போது பேசுவதால் அது திசை திருப்ப வாய்ப்புள்ளது.

வைரமுத்து மீது சின்மயின் குற்றச்சாட்டுக்களை நான் நம்புகிறேன். வைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். அவரை பற்றி பல பெண்கள் என்னிடம் வந்து புகார் தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.ரைஹானாவுக்கு தெரிந்த விஷயம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தெரியாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.