வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும், புதிய சட்டங்கள் மூலமும், சீர்திருத்தங்கள் மூலமும் மத்திய அரசு பாதுகாப்பாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துவருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் இதுவரை 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இருப்பினும் மத்திய பாஜக அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மறுத்து வருகிறது.
இந்நிலையில் இந்தியத் தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (FICCI) 93வது ஆண்டு பொதுக் கூட்டம் மற்றும் வருடாந்திர மாநாடு இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. மாநாட்டுத் துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய மோடி, “பிரச்சினைகள் நிரம்பிய நேரத்தில் தேசம் கற்றுக் கொண்ட விஷயங்கள், எதிர்காலத்துக்கு தேவையான தீர்மானத்தை வலிமைப்படுத்திக் கொள்ள வைத்துள்ளது. இதற்குக் காரணம் இந்திய தொழில்முனைவோர், இளைஞர்கள், விவசாயிகள், மக்கள் தான்.
வேளாண் துறையில் இருக்கும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மண்டிகளிலும், வெளியிலும் சுதந்திரமாக விற்பனை செய்ய முடியும். இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்
வேளாண் உள்கட்டமைப்பு, உணவுப் பதப்படுத்துதல், சேமிப்பு அல்லது குளிர்பதன கிடங்கு என விவசாயத் துறைக்கும் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற துறைகளுக்கும் இடையில் இருந்த இடற்பாடுகள் இப்போது களையப்பட்டு இருக்கிறது.
விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கூடுதல் சந்தை வசதிகளைப் பெற வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தங்களுக்குப் பிறகு, விவசாயிகளுக்கு புதிய சந்தைகள், விருப்பத் தேர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் அதிக நன்மை கிடைக்கும்.
மேலும் விவசாயிகளைக் காப்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. புதியக் கொள்கைகள், சீர்திருத்தங்கள் மூலமே அது சாத்தியப்படும். இப்போது கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டம் மூலம் அதற்கான கதவுகள் விவசாயிகளுக்கு திறக்கப்பட்டுள்ளன” என்றார் பிரதமர் மோடி.
வேளாண் சட்டம் எதிர்ப்பு போராட்டம்; இதுவரை 11 விவசாயிகள் உயிரிழப்பு