வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது, அது தவிர மற்ற பிரச்னைகள் குறித்து விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியிலிருந்து டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த ஆறு மாதங்களாக கடும் குளிரிலும், பனியிலும் தீவிரமாக போராடி வருகிறார்கள்.
விவசாயிகளுடன் ஒன்றிய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும் விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களைக் கட்டாயம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளனர்.
புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மோடி பிரதமராக பதவியேற்ற நாளான கடந்த மே 26 ஆம் தேதி நாடு முழுவதும் விவசாயிகள் கருப்பு தின அனுசரிப்பு போராட்டம் நடத்தினர். மேலும் வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால் பிரதமர் மோடியின் பதவிக்காலம் உள்ளவரை தங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என விவசாயிகள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவை காரணமாக வைத்து விவசாயிகள் போராட்டத்தை மறந்துவிட்ட ஒன்றிய பாஜக அரசு, அதை முற்றிலும் நிராகரித்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “விவசாய அமைப்புகள் பேச விரும்பினால் அவர்களுடன் பேச அரசு தயாராக உள்ளது.
அதேசமயம் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் கோரிக்கையை ஏற்க முடியாது. அது தவிர வேறு பிற கோரிக்கைகள், மற்ற பிரச்னைகள் குறித்து விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தலாம்” எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் இந்த பேச்சு போராடிவரும் விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறுவேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை. எனவே விவசாயிகளை ஏமாற்றாமல் அவர்களின் நியாயமான கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
விவசாயிகளின் 180வது நாள் போராட்டத்தில் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு