தாம் எப்போதும் விவசாயிகள் பக்கம் நிற்கப்போவதாக அறிவித்து, வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபிந்தர் சிங் மான் விலகி உள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, டெல்லியில் தொடர்ந்து 51 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியும் தோல்வியில் முடிந்தது.
இந்த போராட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கில் ஜனவரி 12 ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள், விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் பூபிந்தர் சிங் மான், பிரமோத் குமார் ஜோஷி, அலோக் குலாட்டி, அனில் கன்வத் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
இந்த குழுவின் பரிந்துரை வரும் வரை வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஆனால் விவசாயிகள் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த விவசாயிகள், இந்த சட்டங்களை நிறுத்தி வைத்து இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் சட்டங்களை முழுமையாக விலக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே கோரிக்கை. 4 பேர் கொண்ட குழுவை அமைத்து இருப்பதையும் நாங்கள் ஏற்க முடியாது. ஏனென்றால் இந்த குழுவில் இடம்பெற்றுள்ள 4 பேரும் விவசாய சட்டங்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள். எனவே மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்று உறுதியாக உள்ளனர்.
வேளாண் சட்டங்கள் குறித்து 4 பேர் குழுவின் நிலைப்பாடு: விவசாயிகளின் பார்வை
இந்நிலையில் உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் குழுவில் இடம் பெற்றிருந்த பாரதிய கிசான் யூனியன் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பூபிந்தர் சிங் மான் விலகி உள்ளார். பூபிந்தர் சிங் மான் தனது விலகல் கடிதத்தில்,
“மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண அமைக்கப்பட்ட 4 பேர் குழுவில் என்னை இணைத்தமைக்கு உச்சநீதிமன்றத்துக்கு நன்றி. நான் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே நிலவும் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் நலனுக்காக துணை நிற்பேன்” என அறிவித்துள்ளார்.
வரும் திங்கட்கிழமை குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்துவதற்கு தடைகோரி மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இந்த குழு தொடர்பாக உச்சநீதிமன்றம் புதிய முடிவினை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்றம் அமைக்கும் குழுவை ஏற்க மாட்டோம்; தொடரும் விவசாயிகள் போராட்டம்