வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க பாடகி ரிஹானா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளது மோடி அரசிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து, தலைநகர் டெல்லி மற்றும் எல்லைப் பகுதிகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி விவசாயிகள் உறுதியாக இருப்பதால், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
இதனைத்தொடர்ந்து குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய பிரம்மாண்ட டிராக்டர் பேரணியில், ஒருபிரிவினர் திட்டமிட்டு ஏற்படுத்திய வன்முறையால் ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் குவிந்து வருவதால், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை மத்திய அரசு வலுப்படுத்தி உள்ளது. பல இடங்களில் இணைய சேவையையும் துண்டித்து, விவசாயிகள் போராட்டம் குறித்த செய்திகள் வெளிவராமல் தடுக்கப்படுகின்றன.
சிங்குவில் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகளுடன் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி- ஹரியாணா எல்லையில் தற்காலிக சிமென்ட் சுவா் அமைக்கப்பட்டுள்ளது. ஹாஜிபூரில் பல அடுக்குத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்க மேற்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகி ரிஹானா, விவசாயிகள் போராடி வரும் பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து, இது குறித்து ஏன் நாம் பேசவில்லை என்று கேள்வி எழுப்பி, தனது ஆதரவை பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு, பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பெர்க் தனது பதிவில், “இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம்” என்று தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, உலக நாடுகளின் தலைவர்கள் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவரும் நிலையில், தற்போது இவர்களது ஆதரவு உலகக் கவனத்தை ஈர்த்து, பாஜக மோடி அரசிற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.