விவசாயிகள் பிரச்சினை விரைவில் தேசிய பிரச்சினையாக மாறும் என்பதால், பிரச்சனையை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, கடந்த 21 நாட்களாக டெல்லியில் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி, டெல்லியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ரிஷாப் சர்மா உட்பட பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி வழக்கு.. உச்சநீதிமன்றம் விசாரணை
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏஎஸ் போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வில் இன்று (டிசம்பர் 16) காணொலி மூலம் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டது. மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த பிரச்சினை விரைவில் தேசிய பிரச்சினையாக மாறும் என்பதால், விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை தீர்க்க, தேசிய அளவில் குழு அமைக்கலாம். நாடு முழுவதும் உள்ள விவசாய சங்க நிர்வாகிகள், அரசு மற்றும் பிற அமைப்புகளின் பிரதிநிதிகளும் குழுவில் இடம்பெறவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரும் மனுக்கள் மீது நாளைக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசு மற்றும் டெல்லி, ஹரியானா மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.
அதேபோல் விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, விவசாய சங்கங்களையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள நீதிபதிகள் அனுமதி அளித்து, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்துங்கள்- மத்திய அரசுக்கு எச்சரிக்கை