வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்தவர்களின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரி, தலைநகர் டெல்லியில் 68 நாட்களாக விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற மன்தீப் புனியா என்ற பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணி தொடர்பாகக் கருத்து தெரிவித்தற்காக பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தி வயர் செய்தித் தளத்தின் ஆசிரியர் சித்தார்த்த வரதராஜன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பலர் மீது தேச துரோக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், விவசாய போராட்டத்தில் நடப்பவற்றை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்த பலரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் தனிநபரின் ட்விட்டர் கணக்குகள், குழுக்களின் கணக்குகள், செய்தி நிறுவனத்தின் கணக்குகள் ஆகியவை அடக்கம்.
விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பிலிருந்து போராட்டங்களில் நடக்கும் விஷயங்களை வெளிக் கொண்டு வந்த கேரவன் பத்திரிகையின் டிவிட்டர் பக்கம், டிராக்டர் டிவிட்டர் பக்கம், கிசான் ஏக்தா மோர்ச்சாவின் டிவிட்டர் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ச்சியாகச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வந்த கிசான் ஏக்தா மோர்ச்சா பக்கம் ஃபேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டது. இதற்குச் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து முடக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஃபேஸ்புக் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது மீண்டும் கிசான் ஏக்தா மோர்ச்சா ட்விட்டரில் முடக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முகமது சலீம், செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் ஜர்னெய்ல் சிங் மற்றும் ஆர்த்தி, பத்திரிகையாளர் சந்தீப் செளத்ரி, எழுத்தாளர் சஞ்சுக்தா பாசு, முகமது ஆசிஃப் கான் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
பிரசார் பாரதியின் முதன்மை செயல் அதிகாரி சஷி எஸ் வேம்பட்டியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், சட்ட ரீதியான கோரிக்கைகளை ஏற்று, நீதிமன்றம் அளித்த உத்தரவின் படி குறிப்பிட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.