விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 பேரை கைது செய்துள்ள காவல்துறை, மற்றவர்களை தேடி வருவதாக தெரிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, விவசாயிகள் கடந்த 67 நாட்களாக டெல்லியில் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து தற்கொலை மற்றும் டெல்லியில் நிலவும் கடும் குளிர், பனி போன்ற காரணங்களால் இதுவரை 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்து உள்ளனர். இருப்பினும் அமைதியான முறையில் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர் விவசாயிகள்.

இந்நிலையில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தினார்கள். ஆனால் குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தொடர்ந்து போராட்டம் திசை மாறியது.

டெல்லி செங்கோட்டை முற்றுகை; பின்னணியில் பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துவாம்..

டெல்லியில் நடந்த டிராக்ட்ர் பேரணியின் போது ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டும் பேரணியிலிருந்து விலகிச் சென்று செங்கோட்டைக்குள் நுழைந்து தேசியக் கொடிக்கு அருகிலேயே வேறு ஒரு கொடியை ஏற்றிய சம்பவமும், இதையொட்டி நடந்த வன்முறைச் சம்பவங்களும்,

விவசாயிகளின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதமாக பாஜக ஆட்சியாளர்களால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சூழ்ச்சி என்பது அம்பலமாகியுள்ளது. விவசாயிகளின் கூட்டத்தில் விவசாயிகள் அல்லாத வெளி ஆட்கள் நுழைந்து, இந்த வன்முறையை நிகழ்த்தியதாக விவசாயச் சங்க தலைவர்கள் உறுதிப்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில், மத்திய பாஜக அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தேச துரோக வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது வரை 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 84 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே விவசாய சங்கங்களை சேர்ந்த 9 தலைவர்களிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் முடிவு செய்தனர். எனவே அவர்கள் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்; இணைய சேவையை முடக்கிய ஹரியானா அரசு