பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், சீக்கிய சமூகத்தினரை காலிஸ்தானிகளுடன் ஒப்பிட்டு கூறியது சர்ச்சையான நிலையில், நடிகை கங்கனா ரனாவத் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 295A பிரிவின் கீழ் மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும், கார்ப்பரேட்களின் பிடியில் இந்திய விவசாயம் சிக்கிக் கொள்ளும்.

எனவே புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடும் குளிரிலும், பனியிலும் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 750க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள், அரசியல் கட்சிகள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில்,

நடிகை கங்கனா ரனாவத் வேளாண் சட்டம் திரும்பப் பெறுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, மேலும் போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றும் குறிப்பிட்டுக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாகவே ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாகத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அந்த வகையில், நடிகை கங்கனா கடந்த 21 ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”காலிஸ்தானி பயங்கரவாதிகள் இன்று அரசை தங்களுக்கு ஏற்றப்படி வளைக்கலாம்.

ஆனால் நாட்டின் ஒரே ஒரு பெண் பிரதமர் (இந்திரா) அவர்களைத் தனது ஷூவில் போட்டு நசுக்கினார். அவர் (இந்திரா) இந்த தேசத்திற்கு எவ்வளவு துன்பம் கொடுத்திருந்தாலும் கொசுக்களைப் போல் தன் உயிரைப் பணயம் வைத்து அவர்களை (காலிஸ்தானி பயங்கரவாதிகளை) நசுக்கினார். அவர் உயிரிழந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட இன்றும் அவரது (இந்திரா) பெயரைக் கேட்டால் அவர்கள் நடுங்குகிறார்கள். அவரை போன்ற ஒரு நபர் தான் இப்போது தேவை” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் கங்கனாவின் இந்தப் பதிவு வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி டெல்லியில் இயங்கி வரும் சீக்கிய அமைப்பான குருத்வாரா மேலாண்மை கமிட்டி சார்பில் அதன் தலைவரான மஞ்சிந்தர் சிங் சிர்ஸா, அமர்ஜித்சிங் குல்வந்த்சிங் சந்து மற்றும் ஜஸ்பால் சிங் சித்து ஆகியோர் மும்பை காவல்துறையில் நடிகை கங்கனா மீது புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில், “நடிகை கங்கனா தனது பதிவில், சீக்கிய சமூகத்தை காலிஸ்தானி பயங்கரவாத அமைப்பு என்றும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களை கொசுக்களைப் போல கொன்றார் என்றும் கூறுகிறார். சீக்கிய சமூகத்தை வார்த்தைகளால் புண்படுத்தியுள்ளார்” என்று கூறியுள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படியில் மும்பை காவல்துறையினர் நடிகை கங்கனா ரனாவத் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 295A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மஞ்சிந்தர் சிங், “கங்கனா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவசாயிகளுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். போராடிய விவசாயிகளைத் தீவிரவாதிகள் என்று விமர்சித்துள்ளார். கங்கனாவுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.