சபரிமலையில் அனைத்து பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, கேரள அரசு காவல்துறை பாதுகாப்புடன் பெண்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதித்தது. இந்த விவகாரம் கேரளாவில் பெரிய விவாதமாகவும் சர்ச்சையாகவும் மாறியது.
இந்நிலையில் சபரிமலை விவகாரம் குறித்த நடிகர் விஜய் சேதுபதியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் “மாமனிதன்” படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்புக்கு இடையே செய்தியாளர்களுக்கு பதில் அளித்த விஜய்சேதுபதி, “நான் முதல்வர் பினராயி விஜயனின் ரசிகன். சபரிமலை விவகாரத்தில் அவர் மிக சரியான முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக ஏன் பலரும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என தெரியவில்லை. ஒவ்வொரு மாதமும் பெண்கள் சில தாங்க முடியாத வலிகளை சந்திக்கின்றனர். நாம் அனைவரும் அந்த வலியில் இருந்துதான் வந்தோம் என அனைவருக்கும் தெரியும்.
மாதவிலக்கு தூய்மையானது அல்ல என்று யார் சொன்னது? அது மிகவும் புனிதமானது. பெண்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். ஆணாக வாழ்வது மிகவும் சுலபம். ஆனால், ஒரு பெண்ணாக வாழ்வது மிகவும் கடினமானது. அதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். இந்த கருத்துகளுக்கு சமூகவலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.