பெண்களுடன் தவறாக நடந்து கொள்ளும் நானா படேகர்ருடன் இணைந்து நடிப்பதை திரை பிரபலங்கள் தவிர்க்க வேண்டுமென நடிகை தனுஸ்ரீ தத்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா தமிழில் விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர். தற்போது காலா பட வில்லன் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

தனுஸ்ரீ தத்தா அளித்த பேட்டியில், “ஹார்ன் ஓகே படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட வேண்டும் என்று தனுஸ்ரீயிடம் தெரிவித்துள்ளனர். அப்போது நடிகர் நானா படேகர் சம்பந்தமே இல்லாமல் வந்து தன்னிடம் அத்துமீறியதாக தனுஸ்ரீ கடந்த 2008ம் ஆண்டு புகார் தெரிவித்தார். நானா படேகர் அத்துமீறியதால் அதிர்ச்சி அடைந்த தான் 90 நிமிடங்கள் கேரவனுக்குள் இருந்ததாகவும், அந்த சம்பவத்திற்கு பிறகு தனுஸ்ரீ படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறினார்.

மேலும் கூறுகையில், பெண்களிடம் நானா படேகர் மோசமாக நடந்துகொள்வது பற்றி பாலிவுட்டில் அனைவருக்கும் தெரிந்தாலும் யாரும் அது குறித்துப் பேசுவதில்லை. அவர் நடிகைகளை அடித்துள்ளார், அவர்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.

ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் போன்ற பெரிய நடிகர்கள் இவ்வாறான நடிகருடன் நடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அப்போது நான் புதுமுக நடிகை என்பதால் எனக்கு எதிரான செய்திகள் ஊடகங்களில் பரப்பப்பட்டன. நானா படேகரைப் போன்ற ஆட்கள் பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

மேலும், பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக தெரிவிக்கும் #MeToo இயக்கம் இந்தியாவில் ஏன் துவங்கவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். 2008ம் ஆண்டு எனக்கு நடந்தது போன்று நடக்கும் கொடுமைகளை நாம் கண்டுகொள்ளாத வரை இந்தியாவில் #MeToo-க்கு இடமே இல்லை. பாலியல் தொல்லை குறித்து தனுஸ்ரீ தத்தா பேசினார். அதன் பிறகு அவர் காணாமல் போய்விட்டார் என்றே மக்கள் நினைக்கிறார்கள். என்னைப் போல தற்போது பல புதுமுகங்களும் இது போன்ற வலிகளை சுமந்து கொண்டு தான் இருக்கின்றனர்” என கூறி உள்ளார்.

இது குறித்து, நானா படேகர் தெரிவிக்கையில், “தனுஸ்ரீ தனது மகள் வயது பெண் என்றும், அவர் ஏன் தன் மீது அப்படி ஒரு புகார் தெரிவித்தார் என்றும் தெரியவில்லை” எனத் தெரிவித்திருந்தார். பாலிவுட்டில் பிரபலமான நடிகரான இவர் மூன்று முறை தேசிய விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.